பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வேண்டும் விடுதலை

கூறினார்கள். இதை விளக்கும் பொருட்டு 11.6.1972 ஞாயிறன்று வந்த தாளைக் கையில் எடுத்து முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை உள்ள செய்திகளைப் படித்துக் காட்டியும், திரைப்படச் செய்திகளையும் நடிக நடிகையர் படங்களையும், ஓரைப்பயன் (இராசிபலன்)களையும் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டியும்; அது மக்களுக்குப் பயன்பெறும் செய்தித்தாளே அன்றென்றும்; காசு சேர்க்கும் ஒரு வணிக நிறுவனம் என்றும் விளக்கினார்கள்.

'தினமணி'த் தாளிகையில் தேவையான செய்திகளை ஒருவாறு தொகுத்து எழுதினாலும் தன் (ஆரியப் பார்ப்பன) இனப்பற்றால் 'விஸ்தரிப்பு' 'ஜரூர்’ என்று வடசொற்கலந்து எழுதுவதையும், புராணப் புரட்டுகளைப் பரப்பியும், "காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சாரியார் மதுரையில் காலடி எடுத்துவைத்தார்; தெய்வீக மனம் கமழ்ந்தது" என்பது போன்று செய்தி எழுதியும் தன் இனத்தைக் காத்துத் தமிழினத்தைத் தாழ்த்தியே வைத்திருக்க நினைப்பதையும் கண்டித்தார்கள். இதேபோல் தமிழினத்தின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும 'விடுதலை’ நாளேட்டிலேயே "பகிஷ்கரிப்பு, இங்கிலீஷ் மீடியம்" என்பன போன்று மொழிக்கலப்பு செய்வதையும் சாடினார்கள். பெரியாரிடம் உள்ளவர்களே தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டும்; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளியில் பயிலச்செய்து கொண்டும்; “டாடி, மம்மி” என்று கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருப்பதாகச் சொல்லி அதை வன்மையாகக் கண்டித்தார்கள். தனித்தமிழில் ஒரு நல்ல செய்தித்தாள் நடத்திக் காட்டத் தாம் முன்பே திட்டமிட்டதாகவும் ஆனால் திட்டம் நிறைவேறாமற் போனதென்றும்; இருப்பினும் இன்னும் முயன்று கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

தமிழை மதிக்காத திராவிடர் கழகத்தினர் திருக்குறளைப் 'பெண்ணடிமை செய்கிறது: கண்முடி வழக்கங்களைக் கற்பிக்கிறது' என்று சொல்லி வருவதற்கு மறுத்தார்கள். அவர்களுடன் திருக்குறளில் பெண்ணடிமை சொல்லப் பெறவில்லை யென்றும்; திருக்குறளில் அறிவுக்குப் பொருத்தமானவையே சொல்லப் பெறுகிறதென்றும் தாம் தருக்கமிட அணியமென்றும் சூளுரைத்தார்கள்.

“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்”