பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

113

நூல்கள், தாள்கள், ஒலிபரப்புகள், வழிபாடுகள், விளையாட்டுகள், உணவுப்பண்டங்கள், இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்கள், படைத்துறைக்கருவிகள் முதலியவற்றிலும், ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் ஆகியவற்றிலும் தூய தமிழையே பேணுமாறு ஒவ்வோர் ஆயமும், வாரியமும் கொற்றமும், வேந்தமும் அவற்றின் ஆர்வலரும், தனித்தோ இணைந்தோ சொல்லாலோ எழுத்தாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முடிவுறும் வரை தொடர்புடையார்க்கு வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருப்பர்.

இ) முன்னிரு நிலையினும் வேண்டுகோட் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்தபோராட்டக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.

கா) குமுகாயம்:-

அ) தமிழ் நிலத்துள்ள அல்லது அந்நிலத் தொடர்புள்ள இனங்கள் தாய்மொழி வழி தமிழர், திரவிடர், ஆரியர், ஆங்கிலர், வங்காளியர், குசராத்தியர் முதலியவாறே அழைக்கப் பெறுவர், மாறாகச் சமய வழி இந்து, கிறித்துவர், இசுலாமியர், பெளத்தர் சமணர் எனச் சமயநிலைப் பெயர்வழியோ பள்ளர், பறையர், பாணர், குறவர், மறவர், அகம்படியர், கைக்கோளர், கவுண்டர், வேளாளர் முதலியபடி தொழில்வழிக் குலப்பெயராலோ கொடிவழிக் குலப் பெயராலே தம்மை அழைத்துக்கொள்ளவோ, குறித்துக்கொள்ளவோ அல்லது குறிக்கப்பெறவோ கூடார்.

விளக்கம்:

இவ்வகையில் குலப்பாகுபாடு, இன, நிற, தொழில் வேற்றுமைப்பட்டதோர் அமைப்பாகலானும், சமயப்பாகுபாடு கட்சி வேற்றுமைப் போல்வதொரு பாகுபாடாகலானும் விலக்கற்பாலன. புதிதாகப் பிறந்த ஒருவர்க்கு அவர் விரும்பாமலேயே சமயமும் குலமும் அவர் மேல் புகட்டப் பெறுவது கொடுங் குமுகாயக் குற்றமாகும். பொதுவறத்திற்கும் இந்நிலை மாறுபட்டது. தொழிலான் உழுவோன் மகன் உழத்தான் வேண்டுமென்பதும், கட்சியான் பொதுவுடைமையோன் மகன் பொதுவுடைமைக் கட்சியிலேயே உறுப்பினன் என்பதும், எவ்வளவு பிழையோ, குற்றமோ, அவ்வளவு பிழையும் குற்றமுமாம் சமயத்தான் ஓர் இந்துவின் மகன் இந்து என்பதும், குலத்தான் ஒரு பாண மகன் பாணனே என்பதும்.