பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வேண்டும் விடுதலை

போட்டுச் சில பழைய பாடங்களை எடுத்து விட்டுப் புதிய பாடங்களைச் சேர்த்திருக்கின்றனர். அதில் சில தூய தமிழ்ச் சொற்களைப் புகுத்தியிருக்கின்றனர். அவ்வளவுதான். உடனே பார்ப்பன ஆசிரியரெல்லாரும் கூடித் 'தலைமையாசிரியர் கருத்தரங்கு' என்று மாநாடு கூட்டித் தமிழக அரசு மாணவர் நிலைக்குப் புரியாத சொற்களைக் கொண்டு வந்திருக்கிறது; சிறுவர்கட்கு அறிவு விளங்காது என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இவன் 'பூ' என்றிருந்ததைப் புஷ்பம்’ என்று போட்டது எப்படிப் புரிந்தது? நீர் என்றும் தண்ணீரென்றும் இரண்டு நிலைகளில் குறிக்கப் பெற்றதை 'ஜலம்' என்று போட்டாயே அப்போது எப்படிப் புரிந்தது? மூத்த மகன் ஜேஷ்டகுமாரனாகவும், இளையமகன் கனிஷ்ட குமாரனாகவும், திருமணம் 'விவாஹ சுப முகூர்த்த' மாகவும் மாற்றப்பட்ட போது மட்டும் எப்படிப் புரிந்தது? மொழியில் விழிப்புறின், இனம் விழிப்புறும். மொழி இன்றி, இனமில்லை. எனவேதான் மொழி, இன, நாட்டு விடுதலை என்று முக்கொள்கையாகச் சொல்ல வேண்டியதை மொழி-இன விடுதலை, நாட்டு விடுதலை என்று இருகொள்கையாகச் சொன்னேன்.

இப்போது இன்றையக் குமுகாய மாநாட்டில் நிறைவேற இருக்கும் ஒரே ஒரு தீர்மானத்தைப் படிக்கப் போகிறேன். இதுமிகச் சிறந்த தீர்மானம். இது நன்றாக எண்ணி எழுதப் பெற்றிருக்கிறது. நம் கருத்துகள் முழுக்க முழுக்க எழுத்து வடிவில் அடக்கப் பெற்றிருக்கின்றன. சொற்கள் நமக்குப்புரியும் அவர்களுக்குப் புரியாது. இந்த மாநாடு நடத்துவதற்குத் 'தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டு’ என்று பெரிய எழுத்தில் போட்டுத் 'தமிழக விடுதலை மாநாடு’ என்பதைச் சிறிய எழுத்தில் போட்டேன். இல்லையென்றால் மாநாட்டிற்கு இசைவு மறுக்கப்பட்டிருக்கும். நம் அதிகாரிகளிடம் இசைவு வாங்கவே இந்த ஏமாற்றுதல்! நூற்றுக்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர் 97 பேரை ஏமாற்றுகிறார்களே, நாமும் கொஞ்சம் ஏமாற்றிப் பார்ப்போமே என்று ஏமாற்றினேன். எல்லாம் எப்படியாவது ஒரு மாநாடு நடத்த வேண்டும்; நம் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

அடுத்த நாள் மாநாட்டைத் தடுத்தாலும்சரி; ஒன்றும் செய்ய இயலாது. தீர்மானமெல்லாம் அச்சுப் போட்டுக்கொண்டு வந்து விட்டேன். தடுக்கப் பெற்றால் எல்லாம் சுவரொட்டிகளாக ஒட்டப்பெறும்; அஃதாவது எப்படியும் நிலையைத் தவிர்க்க முடியாது. இஃது அரசினர்க்கு எச்சரிக்கை, தமிழர்க்கன்று.