பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வேண்டும் விடுதலை

வானொலி இன்று பெயருக்கே அரசுச் சார்பில் இருக்கிறது. ஆனால் உண்மையில் தனியார் (பார்ப்பனர்) சார்பிலேயே இருக்கிறது. இப்போது உங்கட்கு இன்னோர் எடுத்துக் காட்டைச் சொல்ல விரும்புகிறேன். கோவை மாவட்டத்தில் அமராவதியில் ஒரே ஒரு படைத்துறைப் பள்ளி (sainick school) இருக்கிறது. அந்தப் பள்ளிக்கு ஒவ்வோராண்டும் தமிழக அரசுச் சார்பிலே உரு. 30.000 செலவிடப்படுகிறது. ஆனால் அங்கே நடுவணரசு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் தாம் கற்பிக்கப்பெறுகின்றன. அங்குத் தமிழுக்குக் கிழமைக்கு ஒரே ஒரு பாடவேளை (Period) மட்டும் தான். 10 ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு நூல்தான் பிற எல்லாம் இந்தி, ஆங்கிலப் பாடங்கள். இன்னும் சொன்னால், உங்கட்கு வியப்பாக இருக்கும். அந்த ஒரே ஒரு நூலும் என்ன தெரியுமா? 'கோவலன்' என்னும் நூல்! இங்கு, அஃதாவது தமிழக அரசுப் பள்ளிகளிலே 6 ஆம் வகுப்புக்கு வைத்திருக்கும் தமிழ்ப் பாடம் அங்கு 9 ஆம் வகுப்புக்கு வைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வளவு போதுமா? இவ்வளவு படித்தால் அவன் தமிழைப் படித்துக் கொள்வானா? அடிப்படையிலேயே கை வைக்கிறீர்கள்! தமிழில் என்ன இருக்கிறது? ஏதாவது கண்டு பிடித்திருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டால் "ஆமாம்" (ஒன்றும் இல்லை) என்கிறார்கள் நம் தலைவர்.

இப்போது தீர்மானத்தின் குறிக்கோளைப் படித்தேன்; செயற்பாட்டையும் இப்போது சொல்லிவிடலாம். ஆனால் செயல் திட்டம் நாளை அறிவிக்கப் பெறும். என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தமிழ்க்குடிமகன் அவர்கள் என்னை ஓர் அரசியல் இயக்கம் தொடங்க வேண்டும் என்று சொன்னார். அவர் வேண்டுமானால் தொடங்கட்டும். நான் துணைநிற்பேன். தனித்தமிழ் அன்பர்களை யெல்லாம் கூட்டி அவரையும் இன்னும் பலரையும் சட்டமன்றத்தில் கொண்டுபோய்வைக்க முடியும். ஆனால் அரசியல் கட்சி தொடங்கினால் என்னென்ன ஆகும் என்று எனக்குத் தெரியும் சட்ட மன்றத்திற்குப் போகும் அந்த நிலை மட்டுமே சரி என்று எனக்குப் படவில்லை. எனக்கு வேறு வேலை இருக்கிறது.

இந்தத் தீர்மானத்தின் படிகள் வழக்குரைஞர் கட்கெல்லாம் அனுப்பப்பெறும். நமக்கென்று எல்லாத் தீர்ப்பு மன்றங்களிலும் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்சம் துணிவானவன். நாட்டிற்குக் கொஞ்சம் கேடுகாலம் வந்து கொண்டிருக்கிறது, என்று நினைத்துக் கொள்ளுங்கள். படைத்