பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வேண்டும் விடுதலை

இப்போது மாணவர்கள் பேசினார்கள். எந்தெந்தக் கல்லூரியில் எப்படியெப்படி மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று. எனக்குத் தெரியாது. என்னைத் தொட்டுப் பார்த்தால் என்னென்ன நடக்கும் என்பதை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப்படியான நிலை வருகிறபடி சூழலை வருவித்துக் கொள்ள யாரும் விரும்ப வேண்டாம். இதையெல்லாம் சொல்லுவது தவறு. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லியும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு வராதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஊர்வலத்திற்கு 100 பேர் வந்திருப்பார்கள். இந்த ஊர்வலத்தால் உணர்வு பெற்றோர் சிலரேனும் இருப்பர். நாளை செயல்திட்டத்தை அறிவித்தபின் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, செயல்திட்டம், செயல்திட்டம்தான். நம்மை இந்த மாநாடு மேலும் உறுதியான உள்ளங்களாக்கிக் கொடுத்தது. இம் மாநாட்டை நான் நினைத்ததற்கு மேலாக, மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு இத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஓர் அருமையான நாடகம் ஏறத்தாழ 9.30 மணியளவில் நடக்க இருக்கிறது. எல்லாரும் உணவருந்தி விட்டுத் தவறாது வந்து பார்த்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். நாடகத்தைத் தனித்தமிழ் வேங்கை, வெங்காலூர் அறவாழி அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி யிருக்கிறார்கள். நாடகத்தில் வேறொன்றுமில்லை; நம் கொள்கை நன்றாக விளக்கப் பெற்றிருக்கிறது. நாடகத்திற்கு நாமெல்லாம் வத்திருந்து நம் உணர்வு அவிந்து போகாமல் மேலும் மேலும் சூடேற்றிக் கொண்டிருப்போமாக! (ஒலிபெருக்கியில் விடுதலை முழக்கங்கள் எழுப்பப் பெறுகின்றன)

- தென்மொழி, சுவடி :10, ஓலை-2-4, 1972