பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

137

தூக்கட்டும்; அல்லது சொல்லட்டும்; அதன் பின்தான் நாங்களும் தண்ணீரைத் தூக்குவோம்; அணைப்போம்” என்று எவனும் சொல்வதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்ட ஒரு நிலையை எப்படி ஒரு காலத்தால், துணிவுடன், முன்னேறிச் செய்ய வேண்டுமோ, அப்படியே ஒரு நாடு அடிமைத் தீப்பற்றிக் கொண்ட பொழுது, உரிமை நீரை அதன்மீது வாரி இறைப்பதில், குறிப்பிட்ட எவரையும் எதிர்பார்த்துக் கிடக்கத் தேவையில்லை. உலகில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான நயன்மையை (நியாயத்தை)க் கற்பிக்கலாம். அவரவர் சொல்லுவதையும் சிற்சிலர் பின்பற்றவே செய்வர். எனவே ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவராக எல்லாரையும் பின்பற்றிக் கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. எவரையும் பின் பற்றுவது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதானால், நாம் எல்லாரையும்விட அறிவுள்ளவராக இருத்தல் வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் தம்மை மிகையாகக் கருதிக் கொண்டும் கற்பனை செய்து கொண்டும் நடைமுறை நிகழ்ச்சிகளுக்கு ஊறுகள் செய்து வருகின்றனர்.

பின்பற்றப்படுவர் எவர் என்பதைக் கால நீட்சியும் வினை விளைவும், அறிவுக் கூர்மையுமே காட்டும். இவற்றில் கால நீட்சி என்பது ஒருவன் கொள்கை எத்தனை நெடுங்காலம் தடம் புரளாமல் உள்ளது என்பது. வினை விளைவு என்பது அக்கொள்கை தொடக்கத்தில் உள்ளதைவிட அவன் முயற்சியால் எவ்வளவு விளைந்துள்ளது என்பது. அறிவுக் கூர்மை என்பது அவன் அறிவால் செய்த செயல்கள், உரைகள், வெளியீடுகள் எவ்வளவு என்பது இம்மூன்று வகையாகவும் கணித்துப் பின்பற்றப் படவேண்டியவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் கொண்ட கொள்கையைத் தம்முடையாக்கிக் கொண்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்து, உறுதியுடன் அவர் காட்டும் பாதையில் முன்னேறிப் போக வேண்டுமே தவிர, ஒன்றைப் பற்றுவதும் சறுக்குவதுமாகவே இருந்தால் எந்த விளைவையும் எதிர் பார்க்கவே முடியாது. இவற்றையெல்லாம் இங்கு ஏன் குறிப்படுகிறோமெனில், கடந்த மாநாட்டின் பொழுது சில கூழாங்கற்கள் வயிர ஒளி காட்டி, அங்குக் கூடிய அன்பர்களின் மனங்களைக் குழப்பியடித்துக் கொள்கைக் கூறு போட்டதை நேரிலேயே காணவும் கேட்கவும் நேர்ந்தது. பொதுவாக இன்ன பிற குழப்பக்காரர்களாலேயே நம் கொள்கைக்கும் முடக்கம் ஏற்படுகின்றதை நம்மைப் போல் அன்பர்கள் சிலரும் கண்டு வருந்தி நம் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். ஆக்கி வைத்த சோற்றுக்குப்