பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

141

கொள்கைக்கு 40 எண்ணும், இரண்டாவதாகிய உறுப்புக்கு 35 எண்ணும், மூன்றாவதாகிய பொருளுக்கு 25 எண்ணும் ஒதுக்கலாம். அஃதாவது கொள்கை 8 பங்கு வலிவுள்ளதாகவும், உறுப்பு 7 பங்கு வலிவு படைத்ததாகவும், பொருள் 5 பங்கு வலிவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

கொள்கையைப் பொறுத்த அளவில் தமிழக விடுதலை இயக்கத்திற்கு முழு வலிமை உண்டு. ஆனால் உறுப்பைப் பொறுத்த அளவிலும் பொருளைப் பொறுத்த அளவிலும் நாம் முக்காற் பங்குக்கும் கூடுதலான வலிமையையும் பெற்றாகல் வேண்டும். இன்னுஞ்சொன்னால் நூற்றுக்கு ஐந்து பங்கு வலிமைகூட நம்மிடம் இல்லை. இந்நிலையிலும் நம் இயக்க முயற்சியில் ஏதேனும் ஓரிரண்டு வெற்றி வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றால், அது நம் போன்றவர்களால் கிடைத்த வாய்ப்பென்பதை விட நம் கொள்கைக்குக் கிடைத்த வாய்ப்பென்றே நாம் கருதிக் கொள்ளுதல் வேண்டும். உறுப்பாலும், பொருளாலும் நாம் என்றைக்கு முழுவலிமை பெறுகின்றோமோ அன்றைக்கே நம் இயக்கம் முழுவெற்றி பெறக்கூடிய வாய்ப்பைப் பெறுகின்றது என்று உறுதியாய் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். மற்றப்படி உறுப்பு வலிமையும் பொருள் வலிமையுமின்றி வெறும் வாய் வலிமையால் 'நான் இதை வீசிக் காட்டுவேன், அதை வீசிக் காட்டுவேன்’ என்று வாயால் குண்டு வீசிக் காட்டுபவர்கள் என்றென்றைக்கும் வாய்வீச்சுக்காரர்களே! அப்படி ஏதாகிலும் ஒன்றை வீசுவதற்கும் கூட இயக்கத்தில் உறுப்பு வலிமை மிகுந்திருத்தல் வேண்டும், என்பதை அவர்களும் பிறரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி மதுரையில் நடந்ததைக் கவனிப்போம்.

9-6-73 காலை 8-30 மணியளவில் மதுரைப் பேரியங்கி நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் அன்பர்கள் இருவர் இருவராக அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். 'தமிழக விடுதலை மாநாடு’ என்றும் Liberation Conference of Thamizh Naadu” என்றும் எழுதப் பெற்ற பெரிய பதாகைகள் கட்டபொம்மன் வட்டமேடையின் மேல் சாலைகளை நோக்கிக் கட்டப்பட்டிருந்தன. தெருக்களில் பார்க்குமிடங்களிலெல்லாம் 'தமிழக விடுதலை மாநாடு’ என்று நன்றாகத் தெரியும் படியான சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. இவையன்றி மாநாட்டரங்கத்தின் (விக்டோரியா எட்வர்டு மண்டபம் அல்லது இரீசும் திரையரங்கம்) முன்பும் மற்றும் பல இடங்களிலும் பெரிய பெரியதட்டிகளும் வைக்கப் பெற்றிருந்தன.