பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வேண்டும் விடுதலை

மணி 9வரை ஊர்வலத்துக்கு முன்னே செல்லவேண்டிய யானை வரவில்லை. அன்பர்கள் சிலர் யானையை அழைத்து வருவதில் ஓட்டமும் நடையுமாக ஈடுபட்டனர். காவலர்கள் இரண்டு வண்டிகளில் வந்து ஊர்வலத்தின் பின்னாலும் ஓரத்திலும் நின்று கொண்டனர். ஊர்வலத்தின் முன்னே தமிழக விடுதலை இயக்கத்தின் நீலமும் சிவப்பும் பாதிப்பாதி உடையதும், இடையில் தமிழ்நாடு வரையப் பெற்றுத் 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை எழுதப் பெற்றதுமான, பெரிய கொடியை மறவர் ஒருவர் பிடித்தவாறு பெருமிதத்துடன் நின்றிருந்தார். ஊர்வலக் கூட்டத்தில் நூற்றைம்பதுக்கும் கூடுதலான பேர்கள் நின்றிருந்தனர். கூட்டம் நிமையத்திற்கு நிமையம் மிகுந்துகொண்டே இருந்தது. மிகத் தொலைவான ஊர்களில் இருந்தவர்களுக்கெல்லாம் செய்தி பிந்தித்தான் எட்டியதாகையால் பெரும்பாலார் வருவதற்கு இயலாமற் போனது.

மாநாட்டிற்கு முந்தி வரவேண்டிய தென்மொழி வராதது ஒரு குறை. தென்மொழி வராமையால் தீச்சுடரில் மாநாடு உறுதியாக நடைபெறும் செய்தி இறுதியாக அறிவிக்கப் பெற்றுத் தென்மொழி அன்பர்களுக்கெல்லாம் விடுக்கப் பெற்றிருந்தது. ஆனால் தீச்சுடர் கிடைக்காமற் போனவர்களும் பலபேர். எனவே நண்பர்கள் வழியாகவும் ஏற்கனவே விடுக்கப் பெற்ற அறிக்கைகள் வழியாகவும் மாநாடு நடைபெறும் செய்தியை உறுதியாக தெரிந்து கொண்டவர்களே ஊர்வல நேரத்திற்கு வர முடிந்தது, ஊர்வலத்தின் இடைப் பகுதியில் பெண்கள் நின்றிருந்தனர், தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் (திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரன் அவர்களும், அவர்களுடன் ஆறுமக்களும்) அணியில் நின்றிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகள் திருவாட்டி பொற்கொடி இறைக்குருவன் தம் குழந்தைகள் இரண்டுடனும் ஊர்வலத்தில் நின்றிருந்தார். இவர்கள் தவிர நாடகத்தைச் சேர்ந்த ஓரிரு பெண்களும் மலைநாட்டைச் சேர்ந்த ஓரிரு குடும்பங்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தினர், 'தமிழர் நாடு தமிழருக்கே', 'தமிழ்நிலத்தை மீட்போம்', 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்', 'பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது', 'உலகத் தமிழரே ஒன்று சேருவோம்', 'அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்', ‘விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்’ என்பன போலும் முழக்கங்களை எழுதிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர். தெருக்களில் நடந்து போவாரும் வருவாரும்