பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வேண்டும் விடுதலை

மலையுந்தில் வந்து இறங்கினார், ஊர்வலத்தை மேலும் செல்லாமல தடுத்து நிறுத்தினார். அவர் வண்டியை யொட்டிப் பின் தொடர்ந்து வந்த இரண்டு மூன்று காவல் வண்டிகளிலிருந்து இரும்புக் கவிப்பு அணிந்த காவலர்கள் சடசடவென இறங்கி ஊர்வலத்தினரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சூழ்ந்து அணிவகுத்து நின்றனர். மிக வேகமாக நடத்தி வந்த யானை திடுமென மேலும் செல்லாமல் கட்டுபடுத்தப்பெற்றதும் உணர்வை அடக்கமாட்டாமல் கோடைக்கால இடிமுழக்கம் போல் ஊரே அதிரும்படி அடிக்கடி பிளிறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தது. அதன் பாகன் தன் கைத்தோட்டியால் அடிக்கடி அதை அடக்க முயற்சி செய்தும் களிற்றுப் பிளிறல் நொடிக்கொருமுறை வானைப் பிளந்து கொண்டிருந்தது. அந்தப் பிளிறல் 'தமிழ்நாடு தமிழருக்கே’, ‘அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்’ என்று முழக்க மிடுவதைப் போல் இருந்தது. யானைப் பிளிறல் ஊரையே அங்குக் கூட்டி விட்டது. பொதுமக்கள் சாலை யோரங்களிலும், உயரமான இடங்களிலும் நின்று வேடிக்கை பாத்தனர்.

துணை மாவட்டக் காவலதிகாரி, ஊர்வலத்தினர் தாம் இசைவு பெற்றதற்கு மாறான முழக்கங்களை யிடுவதாகவும், அவற்றைத் தட்டிகளில் வேறு எழுதிப் பிடித்துக் கொண்டு போவதாகவும், மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களை அழைத்துக் கூறி, அவற்றை விலக்குதல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்திச் செல்ல இசைவு தர முடியும் என்றும் தெரிவித்தார். அமைப்பாளர் ஊர்வலத்திற்கு முன்பே முறைப்படி இசைவு பெற்றிருக்கின்றோம். என்றும் எனவே தடுப்பது முறையன்றென்றும், ஊர்வலத்தினர் அனைவரும் கற்றவர்களாகையால் எவ்வகை வன்முறையோ கலவரமோ செய்ய முற்பட மாட்டார்களென்றும், ஊர்வலத்தை மேற்கொண்டு போக விட்டால் அமைதியாக போய்ச் சேர்ந்து, பிற்பகல் மாநாடும் மிக அமைதியாக முடியும் என்றும். இதனால் அரசினர்க்கோ பொதுமக்களுக்கோ எவ்வழியும் தீங்கு வருவதற்கில்லையென்றும், எவரும் தங்கள் கொள்கைகளையும் கருத்துகளையும் அமைதியாகப் பரப்புவதற்கு இந்திய அரசியல் அடிப்படை உரிமைச்சட்டம் இசைவு தருகின்றதென்றும். அந்தவழி தங்களுக்கும் அவ்வுரிமைச்சட்டம் உண்டென்றும். அதைத்தடுப்பது முறையாகாதென்றும் பலவாறு மாவட்டத் துணைக்காவல் அதிகாரியிடம் அமைதியாக எடுத்துரைத்தார்.