பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வேண்டும் விடுதலை

விட்டீர்கள், தென்மொழிக் கொள்கை என்றால் என்ன கொள்கை என்று கேட்டிருந்தால் விளக்கியிருப்போம். நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளாத குறைக்காக நாங்கள் பொருளையும் முயற்சியையும் இழக்க வேண்டுமா?” என்று கேட்டார்.

“எப்படியும் நாங்கள் கொடுத்த இசைவுகள் திரும்பப்பெறப் படுகின்றன; ஊர்வலமும் மாநாடும் தடைசெய்யப்படுகின்றன; நீங்கள் மீறி ஊர்வலம் நடத்தினால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அதிகாரி, "அஃது உங்கள் கடமை, அப்படித் தடை செய்யப் பெற்றதாக வாயால் சொன்னால் போதாது. எழுதிக் கொடுத்து விடுங்கள்” என்றார் அமைப்பாளர். உடனே தொலைபேசி வழி அலுவலக எழுத்தர் வரவழைக்கப் பெற்றார், இசைவு நீக்கக் கட்டளை அவ்விடத்திலேயே எழுதப் பெற்று முத்திரையிடப் பெற்றுக் கைகளில் வழங்கப் பெற்றது. அதன்பின் அமைப்பாளர் ஊர்வலத்தினர்க்குச் செய்தியைத் தெரிவித்து, “இக்கால் தடை மீறப்படும்” என்று கூறி முன்னே சென்றார், உடனே அதிகாரிகள் “நாங்கள் உங்களைத் தளைப் (கைது)படுத்துகிறோம்” என்றனர். அதன்பின்னர் காவல் வண்டிகள் வந்தன. மொத்தக் கூட்டமும் உரத்த கொள்கை முழக்கத்துடனும் ஆவலுடனும் வண்டிகளில் ஏறியது. மிகப் பலரைக் காவலர்களே ஏற விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். விடுதலை மறவர்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தன. அப்பொழுது மணி காலை 10-45 இருக்கும். காவல் வண்டிகள் சென்ற வழியெல்லாம் உள்ளிருந்த தொண்டர்கள் தொடர்ந்து விடுதலை முழக்கங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். உணர்வின் கொந்தளிப்பால் அவர்களின் குரல்வளைகள் முறுக்கமேறி முழக்கங்களுக்குச் சூடேற்றின.

காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்ற அனைவரும் காவல் நிலையத் தாழ்வாரத்தில் அமர்த்தப் பெற்றனர். அதன்பின்னரும் மறவர்கள் குழுக்குழுவாகப் பிரிந்து, மாறிமாறி விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து முழங்கியவண்ண மிருந்தனர். காவல் நிலையம் அதிர்ந்தது. காவலர்களும் காவல் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். காவல் நிலையத்திற்கு வெளியில் தெருவில் போவாரும் வருவாரும் உள்ளிருந்து வரும் முழக்கங்களைக் கேட்டுக் குழுமி நின்று மறவர்களின் செயல்களை வியந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.