பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வேண்டும் விடுதலை

தவர்களைக் கண்காணிக்க ஐந்தாறு இரும்புத்தலைக் காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். இருப்பினும் தளைப்படுத்தப் பெற்ற அன்பர்கள் சிலர் தேநீர் அருந்தவென்றும் காலகம் (சோடா) குடிக்க வென்றும் அடிக்கடி காவல் நிலையத்தின் முன்புறக் கடைகளுக்குப் போவதும் வருவதுமாக விருந்தனர்.

பிற்பகல் இரண்டரைமணி யளவில் காவல் அதிகாரிகளால் அன்பர்களுக்கு எலுமிச்சை, தயிர் உணவுப் பொட்டலங்கள் வருவித்து வழங்கப் பெற்றன. அன்பர்கள் அனைவரும் அவற்றை உண்டு பசியாறினர். உணவுக்குப் பின்னர் முன்பதிந்த 92 பெயர்களின் உடல் அடையாளங்களும் இரண்டு உறவினர் பெயர்களும் பதிய வேண்டி, காவல் அதிகாரிகள் மீண்டும் வரிசைப்படி அன்பர்களை அழைத்தனர். அக்கால் முன்பு பதிந்தவர்களுள் பன்னிருவர் இல்லாமலிருந்தனர். காவலர்களும் முன்னணி அன்பர்கள் பலரும் பலமுறை கூவியழைத்தும் தேடியும் அப்பன்னிருவரையும் காண முடியவில்லை. அவர்கள் ஒருகால் நழுவியிருக்கலாம். அல்லது அக்கால் வெளியில் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அன்று மாலை வரை திரும்பவே இல்லை. இங்கு அன்பர்கள் ஒன்றினை நினைவில் வைத்துக் கொள்ளுதல் எல்லாருக்கும் நல்லது.

பொதுத் தொண்டில் பலவகை உண்டு. நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் பேச்சாலும் எழுத்தாலும் இவ்வுலகத்தையே மாற்றியமைப்பது போல் வீறராப்புக்காட்டுவது ஒரு வகை. செயலுக்கு இறங்கினாலும் காலிலோ கையிலோ ஒரு சிராய்ப்புக்கூட இல்லாமல் மீண்டு விட வேண்டும் என்ற தன்மையில் ஈடுபடுவது ஒருவகை. தன் வேலைக்கோ பிழைப்புக்கோ குந்தகம் வராமல் ஏதோ சில பெருமைகளுக்காக எந்த வகை ஆராவாரங்களையும் செய்யத் துணிந்து விடுவது ஒருவகை இனி, எந்த நிலையிலும் என்ன சூழலிலும் எதிர்வரும் விளைவுகளைப் பாராமல் தான் கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக ஒப்புவித்து விடுவது ஒரு வகை. இவ்வகைகளில் இறுதி வகையினர்தாம் எந்த வினைக்கும் தகுதியுடையவர். குறிப்பாக விடுதலை வரலாறுகள் இப்படிப் பட்டவர்களால்தாம் எழுதப் பெறுகின்றன.

மதுரை மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அன்பர்களில் இறுதி வகையினர் மிகுதியும் இல்லை. எனினும் ஓரளவு துணிவுள்ளவர்களாக இருப்பார்கள் என்றுதான் நாம் அனைவரும் கருதியிருந்தோம். அப்படிப்பட்டவர்கள்தாம் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இவர்களன்றி “நானும் விடுதலை வீரன்