பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வேண்டும் விடுதலை

அன்றைய மாலை வெளியீடுகளிலும், மறுநாளைய காலை வெளியீடுகளிலும் வந்திருந்தன. தினத்தந்தி, மாலைமுரசு, தமிழ்முரசு, தினமணி, அலைஓசை, தனிமலர், நவசக்தி, The Indian Express, The Hindu முதலிய எல்லாத் தாள்களிலும் செய்தி பெரிய அளவில் போடப் பெற்று நன்கு விளம்பரம் ஆகியிருந்தது. அவற்றில் 'அலை ஓசை' என்னும் செய்தித்தாள் ஒன்று தான் செய்தியை நடந்தது நடந்தவாறே ஓரளவு உண்மையாகவும் விரிவாகவும், நடுநிலையோடும் முதன்மை கொடுத்து எழுதியிருந்தது. பிற தாள்கள் அனைத்திலும் செய்திகள் திரிக்கப்பட்டும், மாற்றப்பட்டும், குறைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வெளியிடப் பெற்றிருந்தன. 'தினத்தந்தி’ தனக்கேயுரிய முறையில், மதுரையில் திராலிடர் கழகத்தினர் 92 பேர் கைது” என்று புளுகியிருந்தது. 'தினமணி'யும் அதற்கு ஒத்தூதியிருந்தது. அது 'தென்மொழி' ஆசிரியர் என்பதற்குத் 'தமிழ்மொழி' ஆசிரியர் என்றும், 'தென்மொழிக் கொள்கை மாநாடு’ என்பதைத் 'தமிழ்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்றும் வெளியிட்டிருந்தது. அதற்கு இயல்பாகவுள்ள பார்ப்பனக் குறும்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விருந்தது. தென்மொழி என்னும் பெயரைச் சொல்லவும் ஆரியப் பார்ப்பனர்கள் நாக்கூசுகின்றனர் என்று அதனால் தெரியவருகின்றது. 'மாநாடு' என்பதைக் கூட மகாநாடு என்று எழுதி நிறைவடைகிறார்கள் அவர்கள் என்பதை நம் ‘அடிமை’கள் கவனித்தால் நல்லது. இந்து ஆங்கில ஆரிய நாளிதழ், 'தளைப்பட்ட ஒருசிலர் பிணையல்(Bail) கொடுத்து வெளிவர முயற்சி செய்ததாக'ச் செய்தியையே களங்கப்படுத்தியிருந்தது.

திருச்சியிலிருந்து வெளிவரும் 'தினமலர்' என்னும் இதழ் 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்’ என்னும் முழக்கத்தைத் 'தெள்ளிய ஆட்சிக்கு எல்லைகட்டுவோம்’ என்று முழங்கியதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. தில்லிக்கும் தெள்ளிய என்பதற்கும் வேறுபாடும் பொருளும் கூடத் தெரியாமல் தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடத்தில் நடத்தப்பெறும் தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நவசக்தி (பெரிய பெரிய அளப்புகளையெல்லாம் அளப்பது) 'பெருஞ்சித்திரனாரைப்’ 'பெருஞ்சித்தனார்’ என்று எழுதியிருந்தது. மற்றும் ஒவ்வொரு செய்தித்தாளும் தளைப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வகையாகக் குறித்திருந்தது இன்னும் வியக்கத்தக்க செய்தியாம். அலைஓசை 90 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள் என்று எழுதியிருந்தது. தினத்தந்தி 92 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள்