பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

159

என்று எழுதியிருந்ததுடன், அவர்கள் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று 'மிகவும் ஆராய்ந்து' கண்டதுபோல் எழுதியிருந்தது. மதுரைத் தமிழ்முரசு 100 பேர் என்றும் அவர்களுள் பெண்கள் 10 பேர் என்றும் எழுதியிருந்தது. திருச்சி தினமலர் 4 பெண்கள் உட்பட 100 பேர் என்று வெளியிட்டிருந்தது.

நம் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் எவ்வாறு பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன என்பதை உணர்த்தவே இந்நிலைகளையெல்லாம் இங்குத் தெரிவிக்க வேண்டியிருக்கின்றது. எத்தனைப் பேர் சிறைப்படுத்தப்பட்டனர் என்பதைக் கூட அவை முறையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயலாமல் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டே செய்திகள் வெளியிடும் தாள்கள், நாட்டு மக்கள் நலனில் எவ்வாறு அக்கறையுடன் நடந்து கொள்ள முடியும் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், திராவிடர் கழக நாளிதழும், தமிழ்நாட்டுப் பிரிவினைக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வதும், விடுதலை என்ற பெயரிலேயே இயங்குவதும் பெரியாரின் சொந்த விதழாக உள்ளதும், 'தமிழ்நாடு தமிழருக்கே' - என்னும் முழக்கத்தை தலைப்பிலிட்டு வெளிவந்துகொண்டிருப்பதும், பிற மாநிலத்து எழும் விடுதலை உணர்வுக்கு ஆக்கங் கொடுத்துக் கொண்டிருப்பதும. கி. வீரமணியால் இயக்கப் பெறுவதுமாகிய விடுதலை என்னும் நாளிதழும், முரசொலியுந்தாம் இந்த மாநாட்டுச் செய்திகளை ஒருவரி கூட போடவில்லை. அவற்றிற்கு இம்மாநாடும் மாநாடில்லை. அதன் செய்தியும் செய்தியில்லை என்பது கருத்துப் போலும். தமிழரின் எதிர்காலம் பற்றி இவற்றின் கருத்து என்னதான் என்பதை அந்தக் காலமே தான் முடிவு கட்ட வேண்டும். இன்னும் இதைவிட வியப்பான செய்தி ஒன்று உண்டு. அதுதான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற விருந்தவரும், மதுரை மாநாட்டு ஊர்வலந் தொடங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு வந்து ஊர்வலத்தை ஊக்கிவிட்டுச் சென்றவரும் ஆகிய அருமைத் தலைவர் பெரியார் மதுரையில் மறுநாள் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், 'மதுரை விடுதலை மாநாட்டை நடத்தியவர்கள் யாரோ ஊர் பேர் தெரியாதவர்கள். என்றதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்றதும்! இவற்றிற்கெல்லாம் ஒட்டுமொத்தப் பெயர்தானோ அரசியல்’ என்பது!

- தென்மொழி, சுவடி :10, 11. ஓலை :1-12, 1-2,