பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வேண்டும் விடுதலை

தமிழனுடைய பிறந்தகம் எது? அதைத் தீர்மானிக்க வேண்டியவர் யார்? என்கின்ற நிலையெல்லாம். இப்பொழுது இல்லை. தமிழன் இப்பொழுதிருக்கின்ற இந்த நிலையைக்கூட வலுப்படுத்திக் கொள்வானா என்று வருந்திக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த செய்தியைப் பற்றிப் போரிட்டுக் கொண்டிருப்பவர்களாக நாம் இருகின்றோம். இனி, தமிழன் என்று ஓர் இனம் இருக்கின்றதா என்று ஐயப்பட்டு அதை நிலை நாட்டுகின்ற ஒரு கருத்தரங்கு நடந்தாலும் நடக்கும். 'தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமா’ என்கின்ற கருத்தரங்கு நடைபெறுகின்ற நிலை போய், தமிழன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று ஆய்வு நடத்தக்கூடிய நிலைக்கே நாம் வந்தாலும் வருவோம். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எண்ணிப் பார்க்கின்ற பொழுது, தமிழன் தன்னுடைய பெருமையை மறந்துவிட்டு எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றான். என்று கருதி வருந்த வேண்டியுள்ளது.

இது தொடர்பாகக் காலையிலிருந்து மாலையில் பேசிய கருத்துரைகள் முடிய, அருமையான விளக்கங்களை இவற்றை விட வேறு விளக்கங்கள் தேவையே இல்லையென்று சொல்லுமளவிற்கு-அறிஞர்கள் பலரும் நமக்குத் தந்தார்கள். இருந்தாலும் கூட, இந்த விளக்கங்கள் பாவாணர் அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல, இனிமேல் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளும் முடிவான விளக்கங்கள் என்று கொள்வதற்கில்லை. இன்னும் பல நூல்கள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் பல கருத்துகளை நாள்தோறும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம். அப்பொழுதைக்கப்பொழுது நாம் மறுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நிலை இருக்குமே தவிர, இந்தப் போராட்டத்திற்கு முடிவே இருக்காது. எனவேதான் இத்தகைய நிலைகளைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் இருக்கும் படியான ஒரு நிலைக்கு நாம் வந்தாலொழிய வேறு எந்தப் பயனும் இவ்வகைக் கருத்தரங்குகளால் ஏற்படவே போவதில்லை.

இனி, பாவாணர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றேன். இந்தக் கருத்துகளை இனி ஒரு கருத்தரங்கப் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இந்தக் கருத்துப் போராட்டம் வேண்டுமானால் அறிஞர்கள் அளவிலே நிகழ்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் நம்மைப் போன்ற இளைஞர்கள்