பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

171

தன் உயிர் மூச்சாகக்கொண்ட திராவிடர் முன்னேற்றக் கழகம் அக் கொள்கையை வெளிப்படையாகக் கைவிட்ட பின்னரும், அக்கழகத்தின் முன்னிணிக் கொள்கை பரப்பாளராக விருந்த திரு, முரசொலி அடியார் நம் இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பெற்றுத் தம் கழகக் கொள்கையில் நிறைவு பெறாத அந்நிலையைச் சுட்டிக்காட்டி ஓர் அறிக்கை விட்டு, நம் வினைப்பாடுகளுக்குத் துணையாக வந்தார். அவரின் மாய்ந்து போகாத கொள்கைப் பற்றையும் வெளிப்படையான உள்ள உணர்வையும் மதித்துப் பாராட்டி அவரையும் நம்முடன் இணைத்துக் கொண்டோம்.

ஆனால், வழக்கம்போல் நம் மாநாட்டு முயற்சிகள் அனைத்தும் அரசால் முன் கூட்டியே தடைசெய்யப் பெற்றன. அதன் முதல் நடவடிக்கையாக நானும் அடியாரும், எங்களுடன் மாநாட்டு செயற்குழுவினர் அறுவரும் மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சிறைப்பிடிக்கப்பெற்றுக் காவலில் வைக்கப்பெற்றோம். எங்களைத் தொடர்ந்து அடுத்து இரண்டு நாட்களிலும் மேலும் பதினான்கு பேர் சிறைப் பிடிக்கப்பெற்று, எங்களைப் போலவே, காவலில் வைக்கப்பெற்றனர். முதலணியினரான எங்கள் எண்மருக்குப் பின் சிறை வந்தவர்கள் ஊர்வலம் போனதாகவும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் மாநாடு நடத்தியதாகவும் சிறைப்பட்டவர்களாவார்கள். ஆனாலும் மொத்தம் இருபத்திரண்டு பேர்களே சிறைப்பட்டுக் காவலில் வைக்கப் பெற்றோம். நம் இத்தொகை நம் கொள்கையை நோக்கவும், அதன் வெற்றி முறைகளை நோக்கவும் மிகமிகச் சிறிய தொகையானாலும், நாட்டின் நெருக்கடிகளையும், கடுபிடிகளையும் நோக்க மிகவும் பெரியதும் ஒரளவு பாராட்டக் கூடியதும் ஆகும். இருப்பினும் ஓர் ஆயிரம் பேரோ, ஈராயிரம் பேரோ சிறைப்படாத எந்தக் கொள்கையும் முயற்சியும் அரசினர் கவனத்துக்கும் மதிப்புக்கும் உட்படுவதில்லை.

மேலும், அடியார் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையில் அறிமுகப் பட்டவராக இருந்தமையாலும், அவர் நம் மாநாட்டுச் செயற்குழுவினர்க்கு தாமே தம் பெயரை முன் வைத்தும், உதயசூரியன் இலச்சினையுடனும், கறுப்பு சிவப்பு ஆகிய இரு வண்ணத்திலும் மிகப்பெரிய அளவில் அடித்துக் கொண்ட சுவரொட்டியாலும், நம் மாநாட்டைத் தி.மு.க. சார்பில் நடந்த மாநாடாகவே ஒரு சில இதழ்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. இதற்கு,