பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வேண்டும் விடுதலை

மதிப்பிடுவதும், இயக்கத்தின் ஒருமைப்பாட்டையே சிதைத்து விடக்கூடிய செயல்களாகும் என்பதை இனியேனும் புதுக்குடி புகுந்த அன்பர்கள் உணர்ந்துகொள்ளக் கேட்டுக் கொள்கின்றோம்.

‘அனைத்துப் போகாத தன்மை’ என்பால் இருப்பதாக அவ்வன்பர்களில் ஒரு சிலர் நெகிழ்ச்சித் தன்மைகளுக்குத் தாமே கரணியம் காட்டிப் பேசி வருவதை அறிகிறேன். இஃது என்மேல் உள்ள மிகப் பழகிய குற்றச்சாட்டு. இவர்கள் எனக்குப் புதியவர்களும் அல்லர்; அவர்களுக்கு நான் புதியவனுமல்லன். நேற்று இன்று தொடங்கியனவல்ல என் நடவடிக்கைகள். கடந்த இருபது ஆண்டுகளாக என் இயக்கம் வெளிப்படையானது. மக்களின் மனத் தொடர்பும், அறிவுத் தொடர்பும், வினைத் தொடர்பும் எவ்வெவ் வடிப்படையில் நிகழ்கின்றன; வளர்கின்றன; முடிவுறுகின்றன என்பதை நான் நன்கு அறிவேன். அவ்வடிப்படையிலேயே எச்சிறு நிலையினையும்’ எண்ணுகின்றேன்; துணிகின்றேன்; செயல் படுகின்றேன், நான்! நாலே முக்கால உள்ள ஒரு கோலை ஐந்தடி உள்ளது என்றோ, நாலரையடியுள்ளது என்றோ என்னால் என்றும் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரோடு அணைத்துப் போவதற்கேனும் அப்படி நான் சொல்லவேண்டும் என்றும் என்னை எதிர்ப்பார்ப்பவர்களை நான் நிறைவு செய்ய முடியாது. போலி ஆரவார நிகழ்ச்சிகளையும், புரையோட்டப் போக்குகளையும் நான் என்று வரவேற்று மாலை சூடமுடியாது. நடிப்பும், நயமான ஈரப்பேச்சும் என்னோடு பிறக்காதவை. பிறர் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் நான் நீளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நான் இழுவையல்லன். பிறரும் அவ்வாறு நீண்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவனுமல்லன். அவரவர்களின் அறிவுக்குப் பொருந்தும் செயல்களையே நான் அவர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

ஓர் அறிவியல் அறிஞனுக்குப் போலவே கொள்கை எனக்குப் பெரிது. அதில் ஓர் இம்மியையும் அது தவறு என்று உணராத பொழுது பிறர்க்காக மட்டும் குறைத்துக் கொண்டு என்னால் ஈடுபட முடியாது. அதைச் செயலுக்குக் கொண்டுவர என் அறிவுக்குச் சரி என்று பட்ட எந்த நடவடிக்கையிலும் நான் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருபவன். அந்நடவடிக்கை பிறர் அறிவுக்கும் சரி என்று பட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனும் அல்லன். தேவையானால் இரவு பகலாக என் கொள்கைகளைச் சரியான உணர்வு உள்ளவர்கள் என்று நான் கருதுபவர்களிடம் எடுத்து விளக்க இதுவரை