பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

175

தயங்கியதுமில்லை, இனித் தயங்கப்போவதுமில்லை. இந்த நிலையில் என்னொடு வந்து பொருந்துபவர்களை நான் தடுத்தவனுமல்லன்: பொருந்தாமல் விலகிப் போகின்றவர்களை நான் கெஞ்சியவனுமல்லன்.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசுபவன் நான்; வினையிலும் அப்படியே! குழைவு நெளிவுகளால் என் கருத்தை என்றும் வயப்படுத்த முடியாது. கொள்கையை இறைவனாகக் கருதுகின்றேன். அக்கொள்கைப் போக்குடைய நேர் நோக்குடையவர்களை என் தோள் மேல் தூக்கிக்கொண்டு போகவும் தயங்கமாட்டேன். அமைச்சர்களைப் போய்ப் பார்க்கவும், அவர்களுக்கு மாலைசூட்டவும், அம்மாலைக்கீடாக எதையேனும் எதிர்பார்க்கவும் எனக்குத் தெரியாது. அவர்கள்பால் சலுகைகளை வேண்டுதல் நம் வாழ்வில் என்றும் நேர்ந்ததில்லை; நேரவும் நேராது. பட்டத்திற்காகவோ பதவிக்காகவோ என்னை எவரும் அடியாள் ஆக்கிவிட முடியாது. நான் வெளிப்படையாவன். எந்த விளம்பரமும், கொழு கொம்பும் எனக்குத் தேவையில்லை. என்னை நானே நடத்திக் கொள்ள எனக்குத் தெரியும். உதவி வேண்டும் என்பதற்காகப் பிறர் கால்களை முத்தமிடும் பழக்கம் எனக்கில்லை. உதவி செய்தவர்களின் கைகளை நன்றியுடன் என்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளக் காத்திருப்பவன் நான். முடிந்தால் என் கொள்கைகளைச் செயற்படுத்துவேன். இல்லெனில் அவற்றுடன் என்னைப் புதைத்துக் கொள்வேன். மொத்தத்தில் என்னால் பலருக்கும் ஊதியமுண்டு. ஆனால் எவருக்கும் என்னால் இழப்பில்லை. இந்தக் குணங்கள் ஒரு விடுதலை மறவனுக்குத் தேவையில்லை யென்றால், அவனுக்கு விடுதலை உணர்வும் தேவையில்லை என்பதே என் முடிவு.

ஏனெனில் இவைதாம் ஒருவனைத் தம் கொள்கைப் பிசிறுகளினின்று காப்பவை; தம் கடடையைப் பிறர்க்கு விலை போக்குவதினின்றும் தடுத்து நிறுத்துபவை. எனவே, இவற்றை என்றைக்கும் ஒத்துப் போகாத தன்மை என்றோ, அனைத்துக் கொள்ளாத தன்மை என்றோ குறைத்து மதிப்பிட வேண்டா. ஒத்துப் போகின்ற தன்மைகள் வேறு: அணைத்துக் கொள்கின்ற தன்மைகள் வேறு. கொள்கை நெகிழ்ச்சி என்பதெல்லாம். பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம்; மறந்துவிடக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இயக்கத்துக்கு ஏற்றவையாகக் ஒப்புக்கொள்ளக் கூடியனவல்ல.