பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வேண்டும் விடுதலை


தேசியம் பேசும் திருடர்கள்


நிலம் பரவலாக இருந்தால் கொள்ளையடிப்பவர்களுக்குத் தங்கள் வேலை எளிதாக முடியும்; சிறப்பாகவும் நடைபெறும். அரசியல் கொள்ளையர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் பகலில் கொள்ளையடிப்பவர்கள். இவர்கள் தேசியம் பேசுகிறார்கள் என்றால், உண்மையில் நாட்டு மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டுதான் அப்படிப் பேசுகிறார்கள் என்று எவரும் தவறாக எண்ணிவிடக் கூடாது, மெய்யாகவே இப்பொழுதுள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற கருத்துகளில் பற்பல வகையான உள்நோக்கங்கள் உள்ளன. என்பதைப் போகப் போகத்தான் கண்டு கொள்ள முடியும். மேலும் இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் என்ற உயர்ந்த தகுதியுடைய தலைவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தேசிய நலன் கருதிக் கூறுவதாக இவர்கள் வெளிப்படுத்தும் பேச்சுகளில் எவரும் நம்பிக்கை வைக்கவும் தேவையில்லை. இக்கால் இந்தியத் தேசியம் பேசும் தலைவர்களை இந்த அளவில் தான் நாம் மதிப்பிட முடியும்.

இந்தியா, பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்த நாடு என்றாலும் இங்கு இரண்டு வகையான அடிப்படைக் கோட்பாடுகள் நிலவுவதை எவரும் மறுத்திடவியலாது. ஒன்று, மிகமுன்பே இங்குத் தோன்றி வேரூன்றி நிற்கும் திரவிடக் கோட்பாடு. அஃதாவது பழந்தமிழ்க் கோட்பாடு. இரண்டு, இந்தக் கோட்பாட்டை உள்ளடக்கிச் செரித்துக் கொண்டு பரவி நிற்கும் ஆரியக் கோட்பாடு. இந்த இருவகை