பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வேண்டும் விடுதலை

தேசியம் என்பது ஏதோ, அரசியல் படிநிலை வளர்ச்சி போலும், பொருளியல் நாகரிக முதிர்ச்சி போலும் திட்டமிட்டுப் பேசிக்காட்டப் பெறுகிறது. வெளியுலகத்தவர்களும் இவர்களின் கரவான பேச்சையும். ஒரு மிகப்பெரும் தேசிய இனத்தையும் வழிவழியாய் மிக்கூர்ந்து வரும் அதன் கலை, கல்வி, பண்பாட்டு நலன்களைக் கட்டழிக்கும் கொடுஞ் செயலையும் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பின்றி, இத் தேசியம் பேசும் திருடர்களின் உயர்ந்த தேசிய இன முன்னேற்ற முயற்சிகளே என்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை தகர்த்தெறியப்பட வேண்டும். அதற்கு இத்திரவிட இன வழி முனறயினர்தாம் பெருமுயற்சி செய்ய வேண்டும்.

இம் முயற்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள், இத்திரவிட இனத்திலேயே பிறந்து, இவ்வின நலன்களையே உண்டு கொழுத்து, இங்குள்ளவர்களுக்கே பகைவர்களாகவும் காட்டிக் கொடுப்பான்களாகவும் மாறித் தேசியம் பேசி, வடநாட்டுத் திருடர்களின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் சில்லறைத் திருடர்களே. இவர்களைத்தாம் நாம் முதலில் இனங் கண்டு கொள்ள வேண்டும். கடந்த கால இனநல முன்னேற்ற முயற்சிகளும், நாட்டு விடுதலை முனைப்புகளும் சாணேறி முழஞ்சறுக்கும் வீணான வெற்று ஆரவாரக் கூத்துகளாகவே போயின. பெரியார் ஈ.வெ. இரா. அவர்களின் பின்பற்றிகளும் தங்கள் பெயர் முத்திரைகளை மாற்றிக் கொள்ளவில்லையானாலும் அவற்றிலுள்ள சொல்லகங்களை மாற்றிக்கொண்டனர். அவர்களினின்று வெளியேறிய முன்னேற்றங்களோ, திசைமாறித் தங்கள் கட்சிக் கப்பல்களை வலித்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் திரவிட இன மரபை நிலைநாட்ட விரும்பும் எஞ்சிய தமிழர்கள் என்ன செய்வது? இந்தியத் தேசிய நீரோட்டத்தில் நீந்திக் கொண்டுள்ள அரசியல் கொள்ளைக்காரர்களை இனங்கண்டு, அவர்களின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிந்து, அவர்களின் கைகளைப்பிடித்து வெளியே இழுத்துவிடுவதே முதலில் செய்ய வேண்டுவது, இந்தியத் தேசியமும், அதற்கப்பால் உலகத் தேசியமும் பேசப் புறப்பட்டிருக்கும் மக்கள் கட்சியினர், இந்திரா பேராயத்தார், அரசு பேராயத்தார் முதலிய அனைத்திந்தியக்கட்சி அமுக்கர்களையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தல் வேண்டும். தென்னாட்டு அரசியலில் அவர்களின் பங்கு இங்குள்ள திராவிட இனமரபுக் கட்சிகளிடம் குட்டை குழப்புவதும் குழிகள் பறிப்பதுமே!

-தென்மொழி, சுவடி :16, ஓலை 9, 1980