பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வேண்டும் விடுதலை

தந்தை பெரியார் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட இன எழுச்சிப் பாடமும், அறிஞர் அண்ணா அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தந்த அரசியல் அறிவுறுத்தங்களும் இன்னும் உங்கள் குருதி நாளங்களில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் கடந்தகால இடைவெளியில் நீங்கள் உங்களையே திரையிட்டுக் கொண்டு, உங்கள் மனச்சான்றுக்கு மாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தீர்கள். அவற்றிலெல்லாம் உங்களுக்குரிய திறப்பாடுகள் வெளிக்குக் கொண்டு வரப்பெறவில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம். மாறாக, அப்பொழுதெல்லாம் வீசிய அரசியல் சூறாவளிகளில் சிக்கிக்கொண்டு, திக்கித் திணறிப் போனீர்கள். அவற்றிலிருந்தெல்லாம் இன்றுவரை உங்களை நீங்களே மீட்டுக்கொண்டு வெளியே வரமுடியவில்லை. அந்நிலையில் இறுதியாக உங்கள் அழியாத கொள்கையுணர்வுகளையும் புறத்தே வைத்துவிட்டு, உங்கள் போக்குக்கு, உள்ளுணர்வுகளுக்கு என்றும் மாறாகவே, வேறு வேறு திரிபுணர்வு கொண்டவர்களிடமெல்லாம் உங்களை நீங்கள் விரும்பாமலேயே இணைத்துக்கொண்டீர்கள். ஆனால் அந்நிலைகளில் எல்லாம் நீங்கள் தோல்வியே கண்டீர்கள். அத் தோல்வியின் வடுக்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இன்னும் அரசியல் பட்டம் பதவிகளிலும் நாற்காலிகளிலுமே உங்கள் மனம் கிடந்து உழன்று கொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கதாகும்.

தமிழின முன்னேற்றத்தைப் பற்றியே எந்நாளும் எண்ணிக் கொண்டிருக்கும் திறமுடையவரே!

தங்களைச் சுற்றியிருக்கும் அன்பர்களைச் சற்றே விலக்கி விட்டுத் தங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் பூசல்களை ஒருவாறு ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் கூறுகிற அன்புரைக்குச் சிறிதே செவிசாய்க்கும்படி, காலத்தின் கட்டாய அழுத்தத்தில் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

உங்களை- உங்கள் அறிவாற்றலை- உங்கள் இனவுணர்வை உங்கள் தமிழார்வத்தை மூடி மறைத்திருக்கும் அந்த அரசியல் மாயையை பதவிப் புதைச்சேற்றை உதறி யெறிந்து விட்டு, உடனே உங்களை விடுவித்துக்கொண்டு வெளியே வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பெரிய விடிவு காத்திருக்கின்றது. உங்களுக்கென்று தமிழர் வரலாற்றில் ஒரு முன்னேற்ற ஊழி தன் கதவுகளைத் திறந்து