பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

185

வைத்திருக்கின்றது. அதன் தொடக்கம் உங்கள் முடிவாக இருக்கட்டும். அதற்காக நீங்கள் செய்யப் போகும் பெரும்பணி தமிழரின் இன முன்னேற்ற வரலாற்றுப் பொத்தகத்தில் அகன்ற பொன்னேடுகளை உங்களுக்கு அமைத்துக்கொடுக்கட்டும்.

ஒரு பெரும் போராட்டம் இன்றி- பெரிய புரட்சியின்றி- காலச் சகதியில் உள்ளழுந்திக் கிடக்கும் இத் தமிழினம் முன்னேற முடியாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் படுகுழியில் தள்ளப்பெற்றிருக்கும் அத் தமிழினத்திற்கு விடிவு காணும் வல்லமை, அரசியல் அங்காப்புகள், பொருள் நசைகள், பதவிப் படுகுழிகள் , விளம்பரத் தவிப்புகள் போன்றவற்றிலிருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ளும் ஒருவரிடந்தான் இருக்க முடியும். அத்தகைய ஒருவராய் இனி உங்களை நீங்களே ஈடேற்றிக் கொள்ளுங்கள். அத்தகுதியெல்லாம் உங்களிடம் உண்டு. கடந்தகால அரசியல் பாடங்களும் அதனை உங்களுக்கு நன்கு உணர்த்தியிருக்கின்றன.

தமிழின வரலாற்று வீழ்ச்சியை நீங்கள் உணராதவரல்லர், தமிழின மேம்பாட்டுக்காவே நெட்டுயிர்க்கும் உங்கள் உணர்வு இன்னும் சாம்பி விடவும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம், உங்களைச் சுற்றியிருக்கும் அரசியல் கட்டுகளினின்றும் பதவித் தளைகளினின்றும் உங்களை வேரறுத்துக் கொண்டு ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று குரல் கொடுப்பதுதான். இந்த ஒலி முழக்கம் உங்களுக்குப் புதியதன்று. நீங்கள் புறந்தள்ளியதுமன்று. ஏதோ ஒரு சட்ட உந்துதலால், காலத்தின் அழுத்தத்தால் , விலக்கி வைக்கப் பெற்ற, அன்றைய வாயொலி இன்றும் உங்கள் மன ஒலியாக - அடி மனத்தின் துடிப்பாக இருக்கவே இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை முழுவதும் மூடி மறைத்துவிட உங்களால் முடியாது. பெரியாரும் அண்ணாவும் கண்டு கொண்டிருந்த கனவு அதுதான். இன்றைய நிலையில் உலகம் வாழ் தமிழரெல்லாரும் ஒரே யொரு தலைவராக உங்களை மதிக்கவும் போற்றவும் வைக்கும் தலையாய முழக்கமும் இதுதான். மற்றபடி, உங்களுக்கு இனி என்ன தேவையிருக்கின்றது? உங்களுக்கென்று எதனை நாடப் போகிறீர்கள்? நீங்கள் அமர்ந்த நாற்காலியின் சூட்டில் யார் வேண்டுமானாலும் வந்து குளிர்காய்ந்து கொள்ளட்டும். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்; கருத்தழியாதீர்கள். நீண்ட நெடும் வரலாறு உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றது. இன்றைய நிலையில் உலகத் தமிழர் விடிவுக்கென எழுச்சிக் குரல் கொடுக்கும் இன்னொரு தலைவரை நாங்கள் காணமுடியவில்லை.