பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வேண்டும் விடுதலை

கைப்பற்றிக் கொண்டு, இந்நாட்டின் மிகப் பழைமையான உரிமையின மக்களை தமிழர்களை அவர்கள் தம் நிலையினின்று ஒரு சிறிதும் மீளாதவாறு மிகவும் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது இந்தியாவின் ஆரியப் பார்ப்பன அரசு. இந்த அடிமை நிலையின் முழு இழிவையும் இயலாமையையும், அண்மையில், தமிழீழத்தில் அடித்து, நொறுக்கி, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் இன மக்களுக்கு ஒரு வகையிலும் நேரிடையாக உதவ முடியாமற் போன பொழுதே, தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. என்ன கொடுமை! தாம் வணங்கத்தக்க பெற்றோர்கள் முன்னிலையிலும், தாம் பேணத்தக்க தம் உடன்பிறப்புகள் முன்பும், தாம் வழிபடத்தக்க தம் அன்புக் கணவன்மார்கள் எதிரிலும் தமிழ்ப் பெண்கள், ஆ! எவ்வாறு கதறக் கதறக் கற்பழிததுச் சீரழிக்கப்பெற்றுச் சிதைக்கப் பெற்றார்கள்! அவ்வாறு அவர்கள் சிதைக்கப் பெற்ற பொழுது, எப்படி அவர்கள் குமுறித் துடிக்கும் நெஞ்சோடும், குமைந்துருகும் உயிரோடும், செயலற்ற உடலோடும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் உணர்விழந்து கரைந்தார்களோ, அப்படித்தான், இத்தமிழ் நாட்டில் உள்ள ஐந்து கோடித் தமிழர்களும் (தேசியம் பேசும் இந்திரா அடிமைகள் தவிர) நைந்தழிய வேண்டியிருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் எப்படி ஓர் உரிமை நாட்டில் வாழ்வதாக ஒப்ப முடியும்? இனி இந்தியாவில் தமிழர்கள் எப்படி அடிமையாக வைக்கப்பட்டு இருக்கின்றார்களோ, அப்படியே இலங்கையிலும் தமிழர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதுடன் மிக கொடுமைக்கும் இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு அண்மையில் அங்கு நடந்த இனக் கலவரங்களும் அழிவுகளுமே மிகத் தெளிவான வெளிப்படையான சான்றுகளாகும்!

உலகில் தமிழர் வாழும் ஏறத்தாழ நாற்பத்தேழு நாடுகளில், மேற்கூறிய இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே அவர்கள் மட்டுமே ஆளுமை உரிமைபெற முடியும். ஏனெனில் அவையிரண்டுமே இன்றைய நிலையில் அவர்களின் தாய் நாடுகள். வரலாற்று அடிப்படையில் இந்த இரண்டு நாட்டிலும் அவர்களுக்குள்ள ஆளுமை உரிமையை, வேறு எந்த நாட்டு அரசாலும் இனத்தாலும் மறுத்துவிடவோ, அல்லது மறைத்துவிடவோ முடியாது.

கடந்த காலங்களில் தமிழினத்துக்கு நேர்ந்த வாழ்வுரிமைத் தாக்கங்களால் மீண்டும் இவ்வினத்துக்கு உரிமை உணர்வு இக்கால் கிளர்ந்தெழுந்துள்ளது. அவ்வுணர்வைச் செயற்படுத்துவதற்குரிய முழுத் தகுதியும் முழுவுரிமையும் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டிலும்,