பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வேண்டும் விடுதலை

தமிழினத்திற்கு, இவ்விரண்டு உரிமைத் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்றேனும் தன்னரசு பெற்றால்தான், எதிர்கால முன்னேற்றத்திற்கு வழியுண்டு. எனவே, இரண்டு நாடுகளில் முன் விழிப்புள்ள தமிழீழக் கோரிக்கையை வெற்றி பெறச் செய்வதில் உலகத் தமிழினம் முழுவதுமாக முனைந்து பாடுபடுவது ஒரு தேவையும் காலத்தின் கட்டாயமுமாக அமைந்துவிட்டது.

ஆனால், தமிழீழக் கோரிக்கையின் வெற்றி, அதன் அண்டை நாடான தமிழ்நாட்டிலும் ஒரு தன்னாட்சிக் கோரிக்கையை எழுப்பி விடுமோ என்று இந்திரா அரசு அஞ்சுவதாகத் தெரிகிறது. இந்த அச்சத்தின் அடிப்படையில் அது தமிழீழக் கோரிக்கை வெற்றிக்கு முழு அளவில் உதவுவது என்பதும் ஒரு கனவேயாகும். எனவே அதன் முயற்சி தமிழீழ விடுதலைக்கு எவ்வகையானும் பயன்படவே முடியாது. அவ்வாறின்றி, அது தமிழீழக் கோரிக்கை தவிர்த்த வேறு தீர்வுக்கு முயற்சி செய்வதைத் தமிழர்கள் எள்ளளவும் ஏற்கமாட்டார்கள்.

இந்த இக்கட்டான இன அழிவுச் சுழலில் இந்திய(இந்திரா) அரசுக்கு நாம் கூறுவதும் எச்சரிப்பதும் இதுதான். ஒருவேளை, ஓரின உணர்வின் அடிப்படையில் செயவர்த்தனேயின் தமிழின அழிம்பு முயற்சிகளுக்கு ஆதரவாகவும், தமிழீழ விடுதலை நோக்கத்திற்கு எதிராகவும், இந்திரா காந்தி, நடுநிலைத் தீர்வு செய்வது போன்ற வெளிப்படை முயற்சியில், மறைமுகமாகவும் தந்திரமாகவும் செயல்பட்டு, செயவர்த்தனேயின் நோக்கத்திற்கு வெற்றியையும், தமிழீழக் கோரிக்கைக்குத் தோல்வியையும் ஏற்படுத்திக் கொடுப்பாரானால், அல்லது அதில் விரைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஒரு காலத்தாழ்வை இடையில் புகுத்தி, தமிழின உணர்வைத் தணிவிக்கும் சூழ்ச்சியில் ஈடுபடுவாரானால், அந்நிலை, இந்தியாவிலும் எதிரொலியை ஏற்படுத்தித் தனித்தமிழ்நாட்டுப் போராட்டத்திற்கு உரமிட்டது போல் ஆகும் என்று எச்சரிக்க விரும்புகின்றோம். ஓர் இனம் அடிமைத்தனத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து போவதைவிட, உரிமைப் போராட்டத்தில் ஒரேயடியாக மாண்டு போவதையே நாம் விரும்புகிறோம். ஏனெனில் விடுதலையுணர்வு என்பது அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தில் இயல்பாகத் தோன்றுவது. அது வலுப்பெறுமானால், எத்துணைக் கொடுமையான வல்லாண்மைப் போக்கையும் எதிர்கொள்ளத்தக்கது என்பதை ஆள்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

- தமிழ்நிலம், இதழ் எண். 23, செபுதம்பர், 1983