பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

193


 
தேசிய இனங்களின் விடுதலைக்
கோரிக்கை தீவிரமடைகிறது!


தென்னார்காடு மாவட்டத்தில் திருமுதுகுன்றம் - திருச்சி சாலையில் உள்ள பெண்ணாகடம் என்னும் ஊர், சமயச் சார்பிலும், அரசியல் சார்பிலும் வரலாறு படைத்த ஊர். பாடல் பெற்ற திருத்தலமாகிய அதில்தான் உழவர்களும் தொழிலாளர்களும் கடந்த காலத்தில் கிளர்ந்தெழுந்து புரட்சிக்கொடி ஏந்தி, முதலாளியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போரிட்டனர்.

அந்தப் புரட்சிப் போராட்டத்தின் முதல் புரட்சியாளராய், முழுமைப் போராளியாய் விளங்கிய தீவிரப் பொதுவுடைமையாளர் புலவர் கலியபெருமாள் அவர்களும், அவர் குடும்பமும் அந்த மண்ணில்தான் வீரவரலாறு படைத்தனர். பொதுவுடைமைப் போர் புரிந்த கலியபெருமாளின் குடும்பத்தையே கொலைக் குற்றம் சாட்டிப் பதினைந்தாண்டுகள் சிறைவைத்தது அந்த நாளின் மக்கள் உரிமையை மதிக்காத மாநில அரசு! ஆம்! அந்த அரசு ஒரு திரவிட அரசே! இன்னும் சொன்னால் தமிழன் அரசே! ஆனாலும் அதிகார வெறியாலும் ஆளுமை அங்காப்பினாலும் அந்த அரசு அவ்வாறு செய்தது! கலியபெருமாளும், அவர் துணைவியார் திருவாட்டி வாலாம்பாள் அம்மையார், அவர் மக்களாகிய வள்ளுவன், நம்பியார் என்னும் இரண்டு குலக்கொழுந்துகளும், கலியபெருமாளின் தம்பி, வாலாம்பாளின் தமக்கையார் ஆகிய அனைவரும் முதலாளியக் கொடுமைகளுக்குப் போர்க்கொடி ஏந்திப் போரிட்டனர்.