பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

199

கொள்கை முடிவுகள் (சித்தாந்தங்கள்) என்றும் சாவதில்லை; அவற்றைச் சாகடிக்கவும் முடியாது.

குடியரசுக் கொள்கைப்படி, இணைப்பாட்சிக்கு எத்துணை மதிப்புண்டோ அத்துணை மதிப்பு தனிப்பிரிவு ஆட்சிக்கும் உண்டு. பல்வேறின மக்களின் மனவுணர்வைப் பொறுத்த செய்திகளே இவை! “இந்தியா ஒருநாடு” என்று நிலக்கோள அமைப்பை வலியுறுத்திப் பேசும், ஆட்சியாளர்கள், மக்களின் அமைப்புக்கும் அதைப் பொருத்திக் காட்டிவிட முடியாது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இந்தியா, இதில் எந்தக் கருத்து வேறுபாட்டுக்கும் இடமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு மந்திரமாயப் புரட்டுப் போல், இந்தியா ஓராட்சி முறையில் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அதில் தங்கள் தந்நலவுணர்வு தவிர வேறு அடிப்படைகளைக் காரணங்களாக காட்டிவிட முடியாது. இந்த உணர்வும் ஒருமைப்பாடும் ஆட்டங் காண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே பஞ்சாப், அசாம், நாகலாந்து, மிசோராம் முதலிய இனக் கலவரப் போராட்டங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தேசிய இன விடுதலை உணர்வு என்றோ கனிந்து பயன் நல்கியிருக்க வேண்டும். கொளுத்தப்பட்ட வெடி இடையில் அணைந்துவிட்டது போல், ஏனோ சூடு மங்கிக் கிடக்கிறது. இதற்கு மூலக் காரணம் இங்குள்ள பல்முனைப் போராட்ட முயற்சிகளே ஆகும். பல்முனைப் போராட்ட முயற்சிகள் எப்பொழுதும் இனவிடுதலையைப் பின்னடைவு செய்வன ஆகும் என்பதை, இங்குள்ள இன விடுதலைத் தலைவர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரசியல், குமுகாயத் தலைவர்கள் உணராமல் இருக்கிறார்கள். உணராமல் இருக்கிறார்களோ, அல்லது உணர்ந்தும் துணியாதவர்களாக இருக்கிறார்களோ, நாம் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.

தமிழினத்தின் ஒட்டுமொத்த நலமே, தமிழக விடுதலையில் தான் இருக்கிறது என்பதைத் தமிழின மக்களில் பெரும்பாலார் உணர்ந்திருந்தும், இவ் விடுதலை முயற்சிகள் ஏனோ இன்னும் இங்குத் தலையெழுச்சி கொள்ளாமல் இருக்கிறது. இவ்வெழுச்சி