பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வேண்டும் விடுதலை

காலத்தால் தூண்டப்பெறுவதற்கும், வழிநடத்திச் செல்லப் பெறுவதற்கும் உரிய தலைவர்கள், மக்களைப் பல்வேறு திசைதிருப்பு முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழினம் இன்று எழுச்சி கொள்ளாவிடில், இதன் உள்ளுணர்வும், உந்து வேகமும் காலத்தால் கரியாகிப் போய்விடும் என்று நாம் அஞ்ச வேண்டியுள்ளது.

எனவே, பஞ்சாபியரின் போர்க்குணமும், வீர வெடிப்புகளும் உடனடியாகத் தமிழர்களிடம் தோன்றியாக வேண்டும். அதன் உந்து விசையை ஒருமுகப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி தமிழ்த்தேசிய இன விடுதலையை விரும்பித் தவங்கிடக்கும் இளைஞர்களிடையில் காழ்கொண்டு எழுச்சி பெறுதல் இன்றைய நிலையில் மிக மிக இன்றியமையாதது.

இதுதொடர்பாக, விரைவில் சென்னையில் ஒரு கலந்துரையாடலை நாம் தொடங்கியாக வேண்டும். அம் முயற்சியின் வரவேற்பைப் பொறுத்தது அதன் செயற்பாடு, எனவே, இம்முயற்சியை முழுமனவுணர்வுடன் வரவேற்கும் தனி மறவுணர்வுள்ளங்களும், ஆங்காங்குக் கிளர்ந்துள்ள இன விடுதலைச் சிற்றியக்கங்களும் ஒன்றிணைந்து ஒரு விடுதலைக் கூட்டணியை உருவாக்க முன்வருதல் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அத்தகைய துணிவான செயல்களுக்குத் தம்மை உள்ளாக்கிக்கொள்ள விழையும் உணர்வாளர்கள் உடனடியாக எங்களுக்குத் தம் உறுதி மொழிகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்! வெல்க, தமிழ்த்தேசிய இன, நாட்டு விடுதலை முயற்சிகள்!

- தமிழ்நிலம், இதழ் எண், 39, சூன், 1984