பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வேண்டும் விடுதலை

இந்தியாவின் ஒற்றுமையே தேசிய இனங்களின் உரிமையின் அடிப்படையில்தான் ஏற்பட முடியும் என்பதை அவர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். அவரின் தனிப்பட்ட விருப்பத்தையே இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கையாக ஆக்கிவிடப் பார்க்கிறார்.

மக்களைச் சார்ந்துதான் ஓர் ஆட்சி இயங்க முடியுமே தவிர ஆட்சியைச் சார்ந்து மக்களை இயக்கிவிட முடியாது என்னும் அரசியல் அடிப்படைப் பாடத்தையே இந்திரா கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புராண இதிகாச காலங்களைப் போல, அரசியல், அறிவியல், மக்கள் உரிமையியல் வளர்ச்சிபெற்ற இக் காலத்தையும் கருதிக்கொண்டு அரசின் அனைத்துக் கருவிகளையும் உறுப்புகளையும் தம் அரசியல் நிலைப்பாட்டுக்காகவும், கட்சி வலிவிற்காகவும், தன்னலத்துக்காகவுமே பயன்படுத்தி வருகிறார், இந்திரா.

வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பொருளியல் சுரண்டல்கள் ஒழிப்பு முதலிய அனைத்துக் கோட்பாடுகளையும், முயற்சிகளையும், இந்திய தேசிய ஒருமைப்பாடு என்னும் எப்பொழுதுமே மெய்யாக முடியாத பொய் மாயைப் புனை சுருட்டுப் போலிக் கொள்கையுள் மூடி மறைத்துவிட அவர் முயற்சி செய்வது, விரிசல் விட்டு விழுந்து விடப்போகும் சுவருக்கு வெள்ளையடிக்க முற்படுவதைப் போன்றது. கொள்ளைக்காரர்கள் மக்களைச் சுரண்டி ஏப்பமிடத் துடிக்கும் அரசியல் ஊதியக்காரர்கள், முழுத் தந்நலக்காரர்கள், சில இந்தி வெறியர்கள் முதலியவர்களுக்காக, முழு இந்தியாவையும் சீர்குலைத்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர், நிலைமை இப்படியே போனால், இந்தியா சுக்கு நூறாகச் சிதைந்து போகும் என்பதை ஏனோ அவர் உணர்ந்துகொள்ள மறுப்பதாகத் தெரிகிறது.

இந்திரா இல்லை, வேறு எவர் முனைந்தாலும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட உணர்ச்சியை, மெய்ம்மத்தை ஒடுக்கிவிட முடியாது. அவை உரிமை பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இந்திராகாந்தியும். அவரைக் கண்கண்ட கடவுளாக மக்களுக்குக் காட்டிக் காசு பறிக்கும் அரசியல் கொள்ளைக்காரர்கள் சிலரும் கருத்து நொள்ளையர்கள் பலரும் உணர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

பொய்யான, கருத்துப் பரப்புதல்களாலும், போலியான நடைமுறைகளாலும் மக்களை என்றுமே ஏமாற்றிவிட முடியும்