பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

வேண்டும் விடுதலை

வழிவகைகளை அமைத்துக் கொடுக்காமலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, இந்நாட்டு முதலாளிகளுக்கே ஆக்கமான பல சட்டதிட்டங்களை அமைத்துக் கொடுத்து, அவர்களின் நிழவிலேயே தன் வல்லதிகாரங்களை வளர்த்துக் கொண்டு வருகிறது, இந்திராப் பேராயம்.

வெள்ளையராட்சியைக் கொள்ளையராட்சி என்று குறை கூறினர், இந்நாட்டின் புரட்டல் தேசிய அரசியல்காரர்கள். ஆனால், அவர்கள் என்றுமே ஏழைகளைக் கொள்ளையடித்ததில்லை. கொடுங்கோலர்கள் என்று வண்ணித்தார்கள்; ஆனால் அவர்கள் என்றுமே பாட்டாளிகளுக்கும் உழவர்களுக்கும் எதிராகப் போர் தொடுத்ததில்லை. வெறும் வெற்றுத் தேசிய உணர்ச்சிகொண்ட போராட்டக்காரர்களையே வேளை வந்த பொழுது அடக்கி ஒடுக்கினார்கள். அதே வேளை முகிழ்த்தபொழுது இந்திய நாட்டின் ஆளுமை உரிமையை இவர்களிடம்தூக்கிக் கொடுத்து விட்டு இந்நாட்டை விட்டே நாணயமாகவும், பெருந்தன்மையாகவும் வெளியேறினார்கள். பொதுமக்களை நோக்கி ஒரு போதும் அவர்கள் தம் வல்லதிகாரப் போக்குகளைக் கையாண்டதில்லை. இதை வரலாறு பேசும் வாழ்வியல்கள் உறுதிப்படுத்தும் அவர்களுடைய ஆட்சி எச்சங்கள்தாம் இன்று நம் நாட்டில் கல்விக்கூடங்களாகவும், கலைக்கழகங்களாகவும் பாரளுமன்றங்களாகவும், கோட்டைகளாகவும் கொத்தளங்களாவும் ஏன் அரசியல் சட்டங்களாகவும், அறமன்றங்களாகவும் கூட ஒளி வீசி, அவர்களின் ஆட்சியின் மாட்சியை உலகுக்கே உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள்; ஆனால் என்றென்றும் ஆட்சி செலுத்த விரும்பியதில்லை. மக்களை ஆளவிரும்பினார்கள்; ஆனால், அடிமைப்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; அறியாமையைப் போக்கினார்கள்; ஆளுமையைச் சொல்லிக் கொடுத்தார்கள் அறநெறியை நிலைநாட்டினார்கள்! அவர்களுக்கு முன் இங்கே நால்வருணக் கோட்பாடும். மனு அதர்ம ஆட்சியும் முப்புரி நூலுந்தானே மக்களை ஆண்டு கொண்டிருந்தன! வெள்ளையர்களன்றோ மக்களுக்கு வாழ்வியலைக் கற்றுத்தந்த வள்ளல்கள் அறிவியலை ஆற்றுப்படுத்திய அறிஞர்கள்! அறவியலை நிலைநாட்டிய அறவோர்கள்! நாகரிகத்தை நல்கிய நயன்மையாளர்கள் பொதுமையை வித்திட்ட புதுமையாளர்கள்! அவர்களுக்கு முன்னர் இங்கு சாதிகள் தாமே ஒழுக்கம் சமயங்கள் தாமே ஆட்சி நெறி! பண்டாரங்கள் தாமே பள்ளியாசிரியர்கள் கோயில் தாமே கண்காட்சிகள்! திருவிழாக்கள் தாமே குமுகாய நெறிக் கருத்தரங்குகள்