பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

213

ஆனால், இன்று, இங்கு, நிலைமைகள் மீண்டும் தலைகீழாக அன்றோ மாறிவருகின்றன. மதப்பித்தர்கள் ஆட்சிக் கட்டில் ஏறுகிறார்கள்; பண மூட்டைகள் பதவிகளில் அமர்கின்றன; கொடுமையாளர்கள் அதிகாரங்களைக் கைப்பற்றுகின்றனர்; பழமைக்கு மீண்டும் ஆலவட்டம் வீசப்படுகிறது! புதுமைக்கு மீண்டும் கதவடைப்பு செய்யப்படுகிறது! அறியாமை அறிவியலுடன் கைகோத்துக் கொண்டு, உலா வருகிறது. முதலாளியக் கோமான்கள் நாட்டையே விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்! மதங்கள் மெருகூட்டப் பெறுகின்றன! சாதிகள் சதிராட்டம் போடுகின்றன! கொள்ளையர்கள் திட்டங்கள் தீட்டுகின்றனர்! கொடுமையாளர்கள் சட்டங்களை உருவாக்குகின்றனர்! இங்கே இப்பொழுது அறமெங்கே? ஆட்சியெங்கே? ஆள்பவர்கள் தாம் எங்கே துமுக்கியும் குண்டுகளும், நச்சுப்புகைகளும், தகரிகளும் அன்றோ ஆட்சி செய்கின்றன! படைத்துறைகளும் காவல்துறைகளுமன்றோ அதிகாரங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டன! நாள்தோறும் எத்தனைத் துமுக்கிச் சூடுகள்! எத்தனைக் கொடுமைச் சாவுகள் ! எத்தனையெத்தனை உறுப்புச்சிதைவுகள்! எத்தனை யெத்தனைக் கற்பழிப்புகள்! இராசீவ் காந்தியின் மனைவியும் நடுத்தெருவில் காவலின்றிப் போக முடியாதே!- இது முடியாட்சியை வீழ்த்திய குடியாட்சி நாடு! இங்கு வாழ்க அன்னை (வந்தே மாதரம்) பாட்டு இசைகள்! தூ! இஃதொரு நாடா? இதற்கோர் அரசா? வெட்கம்! வெட்கம்!

இந்தக் கேடுட்ட நாட்டில்தான், வறுமையைப் போக்கச் சட்டங்கள் இல்லை; வலிந்துகேட்பவர் (வன்முறையாளர்) களுக்குச் சாவுத் தண்டனையாம்! மக்கள் குடியிருப்புக்கு வக்கில்லை; கோரிக்கையாளர்களுக்கு வாணாள் சிறையாம்! படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை; பதவி வெறியர்களுக்குப் பல்வேறு அதிகாரங்களாம்! காந்தி பிறந்த நாடாம் இது விளம்பரப்படுத்துகிறார்கள்! ஆனால் கயமைக்கும். களியாட்டத்துக்குமே இங்கு வாழ்க்கை, ஆனால், இவர்கள் சுட்டியுரைக்கும் வன்முறையாளர்களும், கொடுமையாளர்களும் யார்? அவர்கள் எங்கே தோன்றினர்? ஏன், அவர்கள் கருவிகளைக் கையிலெடுத்தார்கள்? அவர்களின் கோரிக்கைகள் என்ன? போராட்டங்களை ஏன் செய்கிறார்கள்? மீண்டும் இந்தப் புனித(!) நாட்டை வெள்ளைக்காரனிடம் ஒப்படைக்கக்கேட்டார்களா? ஆளுநரும் (கவர்னரும்) அரசப் பகராளரும் (வைசிராயும்) மீண்டும் இந்நாட்டை ஆளுமை செய்ய