பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வேண்டும் விடுதலை

வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனரா? இல்லை, நாணயம் அடிக்கத்தான் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். என்று வழக்காடினார்களா? இல்லை, இல்லை. அவர்கள் கேட்பது மொழி உரிமை! இனநல உரிமை வாழ்வியல் உரிமை தன்னாட்சி உரிமை! வறுமைக்கு மருந்து உரிமைக்கு விடுதலை! அவர்கள் ஏன் அவற்றை வேண்டினர்?

அனைத்து இனங்களுக்கும், அனைத்து நாகரிகங்களுக்கும், பண்பாடுகளுக்கும். அனைத்து மொழிகளுக்கும் பொதுவான இந்நாட்டை, ஓரினமே, ஒரு நாகரிகமே ஒரு பண்பாடே, ஒரு மொழியே ஆள்வதற்கு முற்றாட்சி உரிமை கேட்கிறது. அதனால் பிற இனங்களை, பிற தேசிய இன நாகரிகம் பண்பாடுகளை அழிக்கிறது; பிற தேசிய இன மொழிகளைச் சிதைக்கிறது! இவையனைத்தும் மதத்தின் பெயரால். ஒருமைப்பாட்டின் பெயரால், ஒற்றுமையின் பெயரால் துமுக்கிகளின் துணையைக் கொண்டு குண்டுகளின் வலிமைகளைக் கொண்டு படையாளிகளையும் காவலாளிகளையும் சார்பாக வைத்துக் கொண்டும் செய்யப்படுகின்றன. சீரழிக்கப்படுகின்றன!

பேசிப் பார்த்தார்கள் மக்கள்! கோரிக்கை விடுத்துப் பார்த்தார்கள், தங்கள் வாழ்வைப் பறிகொடுத்தவர்கள்! எழுதிப் பார்த்தார்கள், அறிஞர்கள்! ஏனென்று கேட்கவில்லை அரசு! அணியணியாகத் திரண்டு, மாநாடுகள் கூட்டி, அமைதியான , மென்மையான, வேண்டுகோள்கள், தீர்மானங்கள் முழக்கங்கள் முதலிய அனைத்தும் இந்நாட்டு ஆட்சியாளர்களை மேலும் மேலும் வலிந்த ஊமையர்களாக்கின; செவிடர்களாக்கின; செருக்குடையவர்களாக மாற்றின. இறுதியில் இறுமாப்புடையவர்களாக மாறினர் அரசினர்; நெருக்கடி நிலைகள் வந்தன கருப்புச் சட்டங்கள், உருவாக்கப்பட்டன! மிசாக்கள் தோன்றின; சிறைச் சாலைகள் நிரப்பப்பட்டன. தலைவர்கள் சிறைக்குள்ளே வைக்கப்பட்டார்கள்; வெளியே அடிதடிகள்; கண்ணீர்ப்புகைகள் குண்டு வெடிப்புகள்; அடாவடித்தன அடக்குமுறைகள்; கொடுமைக் கொலைகள்; தீ வைப்புகள்:- இவற்றை ஆட்சியாளரின் கைக்கூலிகள் செய்தனர். அரம்பர்கள் (ரெளடிகள்) செய்தனர்; அவர்களால் ஏழைகளின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டன. அவர்களின் குடியிருப்புகள் பற்றியெரிந்தன: அவர்களின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டன ஊர்விட்டு ஊர். மாநிலம் விட்டு மாநிலம் என்று அந்த ஏழைக் குடிமக்கள், வாயில்லாப் பூச்சிகள், புன்மைத்