பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

215

தேரைகள் - ஓடியும் ஒளிந்தும், உயிர்களைக் காத்துக் கொள்ள முயற்சி செய்தனர் ஆனால், பல இடங்களில் பல நேரங்களில், பல காலங்களில் அவ்வேழை உயிர்கள் அவ்வெலும்புக்கூடுகள், இந்நாட்டு மண்ணில் கிளர்ந்த மண் புழுக்கள். ஒட்டு மொத்தமாகப் பிடிக்கப்பட்டன: உயிரோடு புதைக்கப்பட்டன; உயிர்த்துடிப்புள்ளவை சாகடிக்கப்பட்டன; உடலோடும் உணர்வோடும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன!

இவற்றுக்கெல்லாம் அரசு என்ன காரணம் சொன்னது? அவர்கள் தீவினையாளர்கள்; வன்முறையாளர்கள்; கொடுமையாளர்கள்; குமுகாயப் பகைவர்கள்; அரசுக்கு எதிரானவர்கள்; ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் நாட்டு இரண்டகர்கள்; அயல் நாட்டுக் கையாள்கள்; ஒற்றுமைக் கேடர்கள்; ஒருமைப்பாட்டின் எதிரிகள்; இந்தியத் தேசியத்திற்கு மாறானவர்கள்; இவ்வாறெல்லாம் அவர்களின் மேல் குற்றச் சாட்டுகளைப் பொழிந்து தள்ளியது பார்ப்பனிய முதலாளிய வல்லாதிகார மதக்கேடர்களின் கைகளில் உள்ள தில்லியரசு!

எனவே, பல்வேறு காரணங்களுக்காக, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக மலைவாழ் மக்களின் சார்பாக, தேசிய இன எழுச்சியாளர்களின் சார்பாக, மொழியுரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, கொடுமையான கருப்புச் சட்டங்களின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, மத வல்லாண்மைக் கொடுமையாளர்களின் எதிர்ப்பணிகளின் சார்பாக, பார்ப்பனியத்தின் எதிராளிகள் சார்பாக முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, உள் நாட்டுத் தரகு முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, தொழிலாளர்களின் அடக்கு முறைக்கு எதிராக, உழவர்களின் உரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, இலங்கையில் அழிக்கப்படும் தமிழீழத் தமிழர்களின் சார்பாக, ஆங்காங்கு, இந்திய நாடு முழுவதும் உத்திரப்பிரதேசம், பஞ்சாப் , அசாம், மிசோரம், ஒரிசா, காசுமீர், குசராத், மகாராட்டிரம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், தமிழ்நாடு, பீகார், நாகாலாந்து முதலிய மாநிலங்ககளில் ஏதோ ஒரு வகையில் மக்கள் போராட்டமாக, எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் போராட்டங்களும், வன்முறைகளும், சிறை நிரப்பும் போராட்டங்களுமாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

தில்லியரசும், மாநில அரசுகளும் இவ்வெதிர்ப்புகளைப் பல வேறு வகைகளில் அடக்கியும் ஒடுக்கியும் வருகின்றன.