பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வேண்டும் விடுதலை

ஒவ்வோரிடத்திலும் வெவ்வேறு வகையான உத்திகளும், பாணிகளும் கையாளப்படுகின்றன. போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால், அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சிலவிடங்களில் மாநிலக் காவல் துறையினரைக் கொண்டே எழுச்சிகள் அடக்கி யொடுக்கப்படுகின்றன. சிலவிடங்களில் படைத்துறைகள் அழைக்கப்படுகின்றன. சிற்சில விடங்களில் ஆளுங் கட்சிகளில் உள்ள குண்டர்களைக் கொண்டும், குமுகாயக் கொடியவர்களைக் கொண்டும் அரசுகளே எதிர்ப்போராட்டங்களை நடத்தி, நேர்மையான உரிமைப் போராட்டக் காரர்களை முறியடிக்கின்றன. இவ்வாறாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இக் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நாளுக்கு நாள் உள்நாட்டுப் போர்களாகவே நடந்து வருகின்றன.

நடுவணரசும் இவற்றை ஒடுக்கவும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவென்று புதுப்புதுக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்களை, வெள்ளைக்காரர்கள் மக்களின் உரிமைக் கிளர்ச்சிகளை ஒடுக்க எவ்வளவு கொடுமையான சட்டநடைமுறைகளைக் கையாண்டார்களோ, அவற்றைவிட மிகமிகக் கொடுமை வாய்ந்த சட்டங்களை, அயலவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக் குடியரசுமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியல் உரிமைக் கிளர்ச்சிகளுக்கெதிராக, இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வல்லாளுமைக் காரர்கள், போட்டுப் பலவகையானும் மக்களுக்கெதிரான உள்நாட்டுப் போரைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதுவன்றி, மக்கள் தங்கள் உரிமை உணர்வுகளில் மனம் செலுத்தாத வண்ணம், இதுநாள் வரையில் இல்லாத மத விழா நாள்களை நடைமுறைப் படுத்தியும், கலை, பண்பாட்டியல் என்னும் பெயர்களில், ஆரவார அருவருப்புத்தனங்களைப் புகுத்தியும், பற்பல தேசிய விளையாட்டுகளைப் புகுத்தியும் அனைத்துலக அரசியல் , கலை, பண்பாட்டியல், பொருளியல் மாநாடுகளை நடத்தியும், அவற்றின் செயல்பாடுகளை யெல்லாம் இந்தியாவிலுள்ள அனைத்து வானொலி நிலையங்களின் வழியாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் வழியாகவும், ஒலி ஒளி பரப்புதல்களைச் செய்தும், இங்குள்ள வல்லதிகாரக் கொடுமை அரசு, மக்களை மூளைச் சலவை செய்தும் திசைதிருப்பியும் வருகிறது. இவ்வகையில், நாட்டின் மிகு பொருளியலைச் சீரழித்தும் சிதைத்தும், வீணாக்கியும் வருகிறது. இன்னும், 1962இல் சீனத் தாக்குதலும்,