பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

217

1985இல் பாக்கித்தான் வன்வரம்பு(ஆக்ரமிப்பும்), 1971-இல் வங்காளப் போரும் தவிர இன்று, எந்தவகையான வெளிநாட்டுப் போரும் நடைபெறாத நிலையில், அயல்நாடுகளான பாக்கித்தான், சீனா முதலிய நாடுகள் போர் மூட்டங்கள் இட்டிருப்பதாக மக்களிடத்தில் ஓர் அச்சத்தையும் செயற்கையாகப் பரப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னிருந்த தன் பாதுகாப்புச் செலவை நான்கு மடங்கு பெருக்கிப் படைத்துறைகளை மக்களுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்காகக் கருவிகளாலும் ஆட்களின் எண்ணிக்கையாலும் வலுப்படுத்தி வருகின்றது. 1975 -76ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 2.000 கோடி. ஆண்டுக்கான, அண்மையில் வகுத்த வரவு- செலவுத் திட்டப்படி இச்செலவு 1985-86ஆம் ஆண்டு 8,000 கோடியாக உயர்ந்திருக்கிறது) இவ் வகையில் இந்நாட்டின் மொத்த வருமானத்தில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்கை, அஃதாவது 15 விழுக்காட்டைச் செலவு செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், இத்தனை முன்னெச்சரிக்கைகளும், அண்மையில் அது கொண்டுவந்த, வன்முறை யொடுக்கத் தனிச்சட்டம், நாட்டின் பாதுகாப்பிற்கெதிராகக் கருவிகளை உருவாக்குவதும் கொள்முதல் செய்வதும் ஆகியவற்றுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டம் போடுவதும், கொடிய வன்முறையாளர்களுக்குச் சாவுத் தண்டணை, வாணாள் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் ஆகிய கொடிய சட்டங்களை நடைமுறைப்படுத்த விழைவதும், தன் நாட்டு மக்கள் மீதே அது போர் தொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.

ஒரு நாடு, தன் சொந்த நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களை உள்நாட்டுப் போராகக் கண்டு அஞ்சுவதும் அவற்றுக் கெதிராகத் தானே அம்மக்கள் மேல் போர் தொடுக்க முற்படுவதும் நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறிகள் அல்ல. அது நாடு, உள் உடைவுகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியே ஆகும். உள்நாட்டுச் சிக்கல்கள் எத்தகையனவானாலும், அவற்றைப் போர் முனைப்புக்களாக ஒரு நாடு அல்லது ஓர் அரசு கருதி அவற்றை அடக்குகின்ற முனைப்புகளில் போர் வேகம் காட்டுவது எந்த நாட்டு அரசுக்கும் அழிவை தேடிக் கொடுப்பதாகும். என்றமட்டில் இப்பொழுது எச்சரிக்கை விடுக்கிறோம். இனி, போகப் போகப் பார்ப்போம்!

- தென்மொழி சுவடி 21, ஓலை 7, 1985