பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வேண்டும் விடுதலை

முடியாது. ஊரில் கொள்ளைக்காரர்கள் மிகுந்து விட்டார்கள் என்பதற்காக, வீட்டிற்குள் எவரும் பசி என்று கிளர்ச்சி செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது மடமை. பசி முதலிய தேவைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தக் கூடாது என்று நெறிமுறைகள் கூறுவது அரசியல் அறம் ஆகாது. இன்னும் சொன்னால் வெளிநாட்டு அரசியல் தொடர்பைச் சரிகட்ட உள்நாட்டின் உரிமையுணர்வுகளை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் அணுகுவதும், தேவையானால் மக்களின் உள்ளார்ந்த உரிமையெழுச்சிகளை மதித்துப் போற்றி அதற்காவன செய்வதுமே இந்நெருக்கடியான நேரத்தில் அரசினர் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளாகும். இதைவிட்டு, விட்டு மக்களின் உரிமை உணர்வுகளையே தவறென்றும் கண்டிக்கத்தக்கன வென்றும் கூறி அடக்கு முறைகளால் அவற்றை ஒடுக்க நினைப்பது, உட்புண்ணை மூடிமறைத்து விட்டு, வெளிப்புண்ணுக்கு மருந்திடும் அறியாமைச் செயலே. காலப்போக்கில் உரிமையுணர்வுகளை மதியாத அரசினரையும் மக்கள் மதியார். அவ்வரசினர் தம் வெளிநாட்டுத் தொடர்பான நடைமுறைகளுக்கும் (அவை சரியாகவே இருப்பினும்) அவர் தம் ஒத்துழைப்பை நல்கார். இனி, ஒத்துழைப்புத் தாரமற் போவதுடன், வெளிப்பகையைப் புறக்கணித்துவிட்டுத் தம் உரிமைக் கிளர்ச்சிகளையும் வெளிப்படையாகவே நடத்த முற்படுவர். தமக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசின் உடைமைகள் எதிரிகளால் தாக்குறும் பொழுது அதைப்பற்றித் துளியும் கவலை கொள்ளார். இந்நிலையில் அரசு கடைப்பிடிக்க வேண்டிய வழங்க வேண்டிய உரிமை முறைகளை கடைப்பிடிக்காமலும் வழங்காமலும் இருப்பதுடன் எதிரியை முறியடிக்க ஒற்றுமையாக இருங்கள் என்று மருட்டிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய மடமை என்பதை அரசினர் காலப் போக்கில் உணரத்தான் போகின்றனர்.

இந்தச் சூழ்நிலையின் முதல் விளைவுதான் நாம் இக்கட்டுரைத் தொடக்கத்தில் பெரியார் ஈ.வே.இரா. பேசியதாகக் கூறிய கூற்று. நாட்டு விடுதலை உணர்வையும், தம் கட்சி நோக்கங்களையும் சிறிதுகாலம் மறந்து விட்டு, ஆளுங் கட்சியான பேராயக் கட்சிக்குத் தம் முழுத்துணையையும் ஆற்றலையும் நல்கிய பெரியார், தம் மறந்து போன எண்ணங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும், அதன் வழியே தாம் இனிநடக்க வேண்டும் என்று கருதுவதும் அரசினர்க்கு ஏற்பட்ட இரட்டை இழப்பே! ஒன்று பெரியாரின் பெருந்துணையைப் பேராயக் கட்சி இழப்பது. இரண்டு, அவரின் வலிந்த அரசியல் எதிர்ப்பைத் தாம் ஏற்படுத்திக் கொள்வது, இந்த இருவகையான இழப்பும் அரசினரின் ஆட்சிக் கப்பலில் விழுந்த இரண்டு ஓட்டைகளாகும். அரசினர் இவை