பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

221

குப்பைக் காற்றாகச் செயலிழந்து போவதை அனைவரும் கண்டிருக்கலாம். இவர்களால் தமிழும் தமிழினமும் ஓர் இம்மி அளவாகிலும் முன்னேறும் என்பது ஊமையன் கண்ட ஒரு நொடிக் கனவே ஆகும்.

இனி, இன்னோரையும் அடுத்து, அன்று முதல் இன்று வரை, ஆட்சியைப் பிடித்தாலன்றி நம் இனத்திற்கு ஆவது ஒன்றுமில்லையென்று அறைகூவல் விடுத்து, இடையில் சிலகாலம் பதவி நலம் கண்டு சுவைத்திருந்தாலும், தமிழர் நலத்திற்கென்று அடித்தளமான ஓர் ஆக்கத்தையும் செய்யாமல், உருப்படியான ஒரு சிறு விளைவையும் உருவாக்காமல், பேச்சோ, பேச்சென்று பேசி முழக்கியே வாணாளை வீணாளாக்கி இறுதியில் மனம் நொடிந்து ஊடாடிக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் தலைமைக் கூட்டமும், தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் இனிமேல் செய்வது ஒன்றுமில்லை என்றும், செய்தனவும்(!) செய்து வருவனவுமே(!) போதுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இனி, இறுதி வாய்ப்பாகத் தங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு வாய்ப்புக் கிடைத்தால், திடுமென இவ்வினத்துக்குத் தன்னாலான அத்துணையும் செய்து விடுவோம் என்று வாயலப்பிக் கொண்டிருப்பது என்றுமே நிறைவேறி விடப் போவதில்லை.

‘செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’

- என்னும் செயலின் மாறுபாட்டிலக்கணத்திற்கு முழு இலக்கியமாகிய இவ்வியக்கம், இருமுறை பதவிக்கு வந்தும், இரண்டு நிலைகளாலும் கெட்டது. முதன்முறை செய்தக்க அல்லாதவற்றைச் செய்ததால் கெட்டதும், இரண்டாம் முறை செய்தக்க செய்யாமையாற் கெட்டதும், வேறு எவர்க்கும் விளங்காமற் போனாலும், அதன் வேளாண்மையாளர்க்கும் அறுவடையாளர்க்கும் விளங்கியிருக்கும். இனி, பழைய நிலை, புதுப்பிக்கப் பெற்று, மணல்மேடு குடியிருப்பாக மாறும் என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் என்னும் கதையைப் போன்றதே! நெஞ்சு துணுக்குற்றாலும் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே, ஆற்றொணாக் கவலையோடுதான் இக் கருத்தை இங்கே வெளிப்படுத்துகிறோம்.

அடுத்து, ஆட்சி மாளிகையை மக்களின் அறியாமை மேட்டில் கட்டிக்கொண்டு, கவர்ச்சி வண்ணம் பூசிக் கைம்மை நோன்பு நோற்று, ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்