பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

21

போன்ற ஓட்டைகளுக்கு மதிப்புக் கொடுத்தே ஆகல் வேண்டும். இல்லெனில் அவர்தம் ஆட்சிக் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.

இனி, பெரியார் நடத்தப் போவதாகக் கூறும் தமிழ் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை அவர் துணிந்து நடத்துவாரோ இல்லையோ என்ற ஐயப்பாடு முறையே ஆட்சியினர்க்கும் மக்களுக்கும் எழாமல் இல்லை. ஒரு வேளை ஆட்சியினர்க்கு அவர் ஐயப்பாடு ஊதியமாகவும் படலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், பெரியாரின் புரட்சியுள்ளத்தைப் பார்க்கினும் வலிவான, மேலான ஒரு பெருத்த புரட்சி மனப்பான்மை உருவாகிச் செயல்படப் போவதை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. உண்மையிலேயே இந்தியைப் பல வகையான எதிர்ப்புகளுக் கிடையிலும் வடநாட்டு அரசினர் வலிந்து புகுத்துவதை மேற்கொள்ளுவார்களானால், அவர்தம் முடிவு இரங்கத்தக்கதாகவும், எதிரிகளால் பழித்துரைக்கப்படுவதாகவும் இருக்கும் என்று கணித்துக் கூறுகின்றோம். இந்தி எதிர்ப்பை முறியடிக்க மக்கள் மேற்கொள்ளவிருக்கும் பெரும் புரட்சிக்கு முதல் நடவடிக்கையே அண்மையில் நடந்த மாணவர் புரட்சியாகும். இம் மாணவர் புரட்சியால் அரசினர் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் விரைந்து மேற்கொள்ளப் பெறாவிடில் மக்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் கிளர்ந்தெழப் போவது கல்மேல் எழுத்துப் போன்ற உண்மை! இந்த உண்மை நடந்து தீர வேண்டிய கட்டாயம் நடக்கப்போகின்ற உண்மை.

தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்த மட்டில் வடநாட்டு அரசினரின் கைப்பாவையாக இங்குள்ள முதலமைச்சர் இயங்கிக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை, மேலும் தமிழக முதலமைச்சர் இருவகையான குற்றங்களைத் தம்மையறியாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். அவை. வடநாட்டாரின் நடைமுறை ஆட்சி முறைகள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடு பயப்பன என்று தம்மளவில் அரசினர்க்கு உணர்த்தாமலிருப்பதும். இம்மாநில மக்களிடத்தே வளர்ந்து வரும் மனக்கசப்புகளை ஆளுநரிடம் தக்க முறையில் எடுத்துக் கூறாமல் மூடிமறைத்துத் தம் பதவிப் பொறுப்பை நீட்டித்துக் கொள்வதுமாகும். தாம் எவ்வாறாகிலும் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமை உணர்வுகளைக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று உறுதி பூண்டிருப்பதும் அவரின் அறியாமையே! இவ்வகையில் ஆங்காங்குள்ள தமிழ்ச் செய்தித்தாள்களின் ஆசிரியர்களைச் சிறைப்படுத்தி அவர்மேல் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார் அண்மையில் ஏற்படவிருந்த தமிழ்