பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வேண்டும் விடுதலை

கணிசமான தொகையைக் கருவிகள் வாங்க, ஒப்பந்ததத்தின் பெயரிலாகிலும் கொடுத்திருக்கலாம். அந்த ஒப்பந்தமும், நம் உதவியால், அவர்கள் தமிழீழம் பெற்றால், நம் நாட்டு விடுதலைக்கு அவர்கள் உதவ வேண்டும் என்பதாகவும் இருந்திருக்கலாம். இந்த நிலைகளை யெல்லாம் நாம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசவேண்டிய தேவை ஏன் வந்தது என்றால், கமுக்கமாகப் பேசிக்கொள்ள நம் ஒருவருள்ளும் மனவொற்றுமையோ, நம்பிக்கையோ இன்னும் ஏற்படவில்லை என்பதால்தான்.

ஆனால், நம் கருத்துப்படி அல்லது ஆசைப்படி நடைபெறாமற் போனதற்குக் காரணம் இங்குள்ள தமிழின நலம் நாடும் கட்சிகள் அல்லது நாடுவதாகக் கூறிக்கொண்டுள்ள பணத்தால் வலிவுள்ள இயக்கங்கள், மனத்தால் மெலிவுள்ள அல்லது நலிவுள்ளவையாக இருப்பதுதான். நாம் (நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வகையிலும் வலிவான இயக்கமாக இன்னும் வளர முடியவில்லையே அதுவும் ஒரு காரணத்தான் - என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வலிவிருந்தால் நாம் அவ்வாறு நடந்திருப்போமா என்பதைக் காலந்தான் உணர்த்திக் காட்ட முடியும்) ஆனால், இப்பொழுதுள்ள நிலையில் இதையெல்லாம் பேசி, நடக்கப் போவது ஒன்றுமில்லை. ஓர் ஆற்றாமைக்காகத்தான் இதைக் கூற வேண்டி உள்ளது. இது நிற்க.

இனி, இக்கட்டுரைத் தொடக்கத்தில், தமிழீழத் தொய்வுத் தொடர்பாகக் கூறிய மூன்று காரணங்களை இனிமேலாகிலும் நாம் தவிர்த்துக்கொள்ள இயலுமா என்பது பற்றிப் பார்க்க வேண்டும்.

இவற்றுள்இத் தொய்வுக்கு முதல் காரணமாகக் கூறப் பெற்றது. தமிழீழப் பேராளிகளின் இயக்கங்களுக்குள்ள ஒற்றுமையின்மை. இந்நிலை, இந்த அளவில் மட்டுமே நின்றிருந்தாலும் தாழ்வில்லை. அதனால் ஒன்றும் அவ்வளவு பெரிய இழப்புகள் நேர்ந்துவிடப் போவதில்லை. ஆனால், ஒற்றுமையில்லாத தன்மையை விட, தங்களுக்குள் ஒன்றையொன்று அரித்துகொள்கின்ற தன்மை அதிகமாகிக் கொண்டே வருவதுதான், நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாததாகவும் மிகவும் உள்ளம் நைய வேண்டியதாகவும் உள்ளது. தமிழினத்தின் பலவாறான உள்முகத் தன்னழிவுகள் இவ்வின முன்னேற்றத்தையே பெரிதும் தடைப்படுத்தி வருகின்றன என்பதை நம் முற்கால இக்கால அரசியல் வரலாறுகள் தெளிவாக உணர்த்துகின்றன. ஆனாலும். நாம் இதிலிருந்து இன்னும் மீள முடியாதவர்களாகவே உள்ளது. நம்மைப் பெரிதும் அழிவுக்குள்ளாக்கி அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.