பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வேண்டும் விடுதலை

மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுந்து, நாட்டைச் சீரழிக்குமே அன்றி, அமைதியான ஆட்சியை உருவாக்கிவிட முடியாது. இந்தியாவில் அமைதியின்மைக்கு இந்திய அரசின் அரசியல் அதிகார வெறி அடக்கு முறைகளே முழுக்காரணம்!

வெறும் போர்க்கருவிகளால் மக்களை அச்சுறுத்தி, அடக்கி, ஒடுக்கிப் பணிய வைக்கும் உத்திகள் எல்லாம் இனிமேல் செல்லாது என்பதையே ஆங்காங்கே கிளர்ந்து வரும் பஞ்சாப், மிசோரம், குசராத், மேற்கு வங்காள, கூர்க்கா போராட்ட எழுச்சிகள் காட்டுகின்றன. இவற்றின் உண்மையான உணர்வுகளை விளங்கிக் கொள்ளாமல், படை பட்டாளம் கையில் உள்ளன என்று சரமாரியாகச் சுட்டுத் தள்ளுவதனால் மக்களை அமைதியடையச் செய்துவிட முடியாது.

இந்தியாவில் இன்றைய நிலையில் எந்த மாநிலத்திலுமே மக்கள் அமைதியாக இல்லை. இந்தியத் தலைநகரான தில்லியிலேயே நாளுக்கொரு குண்டுவெடிப்பும், நகரத்துக்கொரு போராட்டமுமாக நடந்து கொண்டிருக்கின்றன. காரணம் மக்கள் வறுமை மட்டுமில்லை, அதிகாரச் செருக்குகள், ஆட்சி வல்லாண்மைகளே அப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு ஊக்கி வருகின்றன.

நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டுப் போர் முட்டங்களை விட, உள்நாட்டுப் போராட்டங்களே அரசை அமைதியிழக்கச் செய்து வருகின்றன. இவற்றையெல்லாம் ஒரே அதிகார அணுகுமுறையைக் கொண்டு அரசு அடக்கப் பார்க்கிறது. எல்லைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுத்தாக்கங்களை முறியடிக்கவும் வாங்கிக் குவித்து வைக்கப் பெற்றிருக்கும் போர்க் கருவிகளெல்லாம் மக்களின் உரிமையெழுச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படுத்தப் பெறுகின்றன. கிளர்ச்சியுறும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் வெள்ளைக்காரர்கள் பயன்படுத்திய அதே உத்திகள் கையாளப் பெறுகின்றன. நீடித்து வரும் இந்த நிலை இந் நாட்டின் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

அரசியலில் எங்குப் பார்த்தாலும் ஊழல்கள், கையூட்டுகள், அதிகாரக் கொள்ளையடிப்புகள், சட்டத்தின் தவறான நடைமுறைகள்!!

பொருளியல் நோக்கில், நாட்டில் பெரும்பகுதி மக்கள் வறுமையின் கொடுமையான பிடியிலிருந்து விடுபடாத அவல நிலை! செத்தும் சாகாத நிலையில் பல கோடி மக்கள்!