பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேண்டும் விடுதலை

உரிமைப் பெருநடைப்பயணத்தை (அவ்வேற்பாடும் சரியான முறையில் அமைக்கபடாமற் போயினும்) நடந்த முற்பட்ட தமிழ்ப் பேராசிரியர். இலக்குவனாரைப் பாதுகாப்புச் சட்டப்படி சிறைப்படுத்தியுள்ளனர். இந்நிலை தமிழ்ப் பேராசிரியர் பிறர்க்கும் நேரவிருக்கும் நிகழ்ச்சிக்கு ஓர் எச்சரிக்கையே! துடிப்பும், பொறுப்பும் வாய்ந்த திரு. இலக்குவனார் போன்ற தமிழ் உரிமைக் காப்பாளர்களைச் சிறைப்படுத்தி விட்டால், தமிழ்மொழியுணர்வு அற்றுப் போகும் என திரு. பக்தவத்சலம் போட்ட தப்புக்கணக்கின் விளைவு இனிமேல்தான் நடக்கவிருக்கின்றது. மொழியுணர்வு அற்ற முதலமைச்சரின் போக்கு நகைப்பை விளைவிக்கின்றது. தமிழ் மொழி விடுதலை உணர்வு தமிழக விடுதலை உணர்வாகக் கிளைக்க நெடுங்காலம் ஆகாது. பேராசிரியர்களால் தான் தமிழ்மொழியுணர்வு கிளப்பப்பெறுகின்றது என்று கருதுவது அறியாமையாகும். காட்டுமிராண்டிக்கும் மொழியுணர்வு உண்டு. தாய் உள்ளவனுக்கெல்லாம் தாய்மொழிப் பற்று அதனைப் பேணி வளர்க்கும் கடப்பாடும் உரிமையுணர்வும் இருப்பது இயற்கை, இந்தி யாட்சியினர் இந்தியைப் பரப்புவதற்கும் போலிக் காரணமாக ஒருமைப்பாட்டைக் கூறினாலும் உண்மையாக அதற்கும் அவர்தம் மொழியுணர்வே அடிப்படையான காரணம் ஆகும்.

மக்கள் எல்லார்க்கும் பொதுவான மொழியுணர்வு மொழிப் பேராசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொள்ள அத்தகையாரை ஒழித்துக்கட்ட முனைந்திருப்பது. பேதையுள் பேதையின் செயலாகும். இவ்வாறு செய்வதால் ஒரு மொழி அடக்கப்பட்டு, அதன் உணர்வும் முடக்கப்பட்டு விடுவது உண்மையாயின், ஆங்கிலத்தை இந்நாட்டினின்று அகற்றப் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் தன்மானம் வாய்ந்த(!) வட ஆட்சி வெறியர் சிலர் ஆங்கிலப் பேராசிரியர்களையும் சிறைப் பிடிப்பதுதானே, அவ்வாறு செய்வது ஆங்கிலத்தை அகற்றுவதற்கும், அவ்விடத்தில் இந்தியை வலிந்து திணிப்பதற்கும் ஏற்ற ஓர் அருஞ்செயலாக இருக்குமே! எனவே எழுந்து வரும் தமிழ் உணர்வை அடக்கித் தமிழ் விடுதலை இயக்கத்தை அழித்துவிட முயல்வது தமிழ் நாட்டு விடுதலை இயக்கத்திற்கு வித்திடுவது போல ஆகும் என்றும், அவ்வாறு தமிழ் நாட்டு விடுதலை இயக்கம் தொடங்கப்பெறுமானால் அதனை அடக்குதல் எதிரிநாடுகளை அடக்குவதினும் அரிதாகும். என்றும் அரசினர் தெளிவாக உணர்ந்து கொள்வாராக!

-தென்மொழி, சுவடி 3, ஒலை 4, 1965