பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வேண்டும் விடுதலை

காட்சியளிக்கின்றனர். இரு தரப்பினரின் சொற்களும் கூட ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன பேசுவது காந்தியம்! நடப்பது பாசிசம்!

இந்நிலையில்தான் அரசு (இந்தியத் தேசியம்,) நாட்டு ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று மாய்மாலக் கூத்துகளையும் வாய்நீள உரைகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்தியத் தேசியம் என்னும் செயற்கை உணர்வில் மக்களைச் சிக்க வைக்க அரும்பாடுபட்டு வருகிறது. இயற்கையான, உண்மையான மொழித் தேசியத்தையோ, இனத் தேசியத்தையோ, அரசு கண்களாலும் காண மறுக்கிறது; காதுகளாலும் கேட்க மறுக்கிறது. மனத்தாலும் மதிக்க மறுக்கிறது. இந்தியா, இந்தியா என்று பொய்த் தேசியம் பேசி, புளுகு ஆட்டம் ஆடி வருகிறது.

அரசு அனைத்து நிலைகளிலும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழும் செயல்படும் மக்களின் உண்மையான எழுச்சிக் காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாமல், அறிந்து கொண்டாலும் செயல்பட முற்படாமல், மக்கள் உணர்வை அவமதிக்கிறது; அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறது; அவர்களின் நாயமான போராட்டங்களை முறியடிக்கிறது; போராடுபவர்களையே அழிக்கப் பார்க்கிறது; அழிக்கிறது!

உண்மையான உணர்வாளர்களையும், சிந்தனையாளர்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும், கொள்கையாளர்களையும், தன்னை எதிர்க்கும் தலைவர்களையும் இல்லாமல் செய்துவிட்டு, அல்லது அடக்கி, ஒடுக்கி, அழித்துவிட்டு, யாரை மக்களென்று கூறி, இவர்கள் ஆட்சி நடத்திப் பார்க்க விரும்புகிறார்கள் என்று விளங்கவில்லை. ஊமை மக்களையும், கருத்துக் குருடர்களையும், மண்ணுளிப் பாம்புகளையும், வெறும் முக்கு விழி வைத்த உடல்களையுமே ஒரு நாட்டுக்குத் தேவையான மக்கள் என்று இவர்கள் கருதுகிறார்களோ?

உள்நாட்டில் செழித்து வளர்ந்துள்ள உணர்வாளர்களையும், கருத்தாளர்களையும் போராட்ட வீரர்களையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டால், வெளிநாட்டுப் போர் வருகிறபோது, இவர்களுக்குத் துணை நிற்க எஞ்சியவர்கள், வெறும் மாந்தப் பாவைகளாகவே இருக்க முடியும். அக்கால், உண்மையான எழுச்சியுள்ள வீரர்களையும் உணர்வாளர்களையும் இவர்கள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறார்களோ?

எனவே, நாட்டுணர்வுகளையும், போராட்ட எழுச்சிகளையும் வெறும் அழிவுக் கருவிகளைக் கொண்டே அடக்கிவிட நினைக்க