பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வேண்டும் விடுதலை

காணவேண்டிய கட்டாயத்துக்குக் கொணரப்பட்டுள்ளோம். எதிரான நோக்கிலன்று; சார்பான நோக்கிலேயே, இக் கருத்துகள் இங்குக் கூறப்பெறுகின்றன என்பதை அன்பர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நம் மதிப்பிற்குரிய, மானமிகு வீரமணி அவர்களின் தமிழின முன்னேற்ற முயற்சிகளையும், செயற்பாடுகளையும், உணர்ச்சியளவிலும், உழைப்பின் அடிப்படையிலும் என்றுமே நாம் பாராட்டவும் போற்றவும் கடமைப்பட்டவர்கள். தேவையான இடத்தில் தொலைவில் நின்றும், இணைந்து – இயங்கியும் நாம் அவ்வாறு பாராட்டியும் – போற்றியும் வந்திருக்கிறோம். ஆனாலும், அவரின் முயற்சிகளிலும், தமிழின முன்னேற்ற அணுகுமுறைகளிலும், அவை தொடர்பான போராட்ட நிலைகளிலும், சில முரண்பாடான போக்குகள் தோன்றிய பின்னர், நாம் ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டுமே இருந்து வருகிறோம். இருப்பினும் அவர் முயற்சிகளுக்கு எதிர்ப்பான நிலைகளை நாம் அன்றும் – இன்றும் எந்த நிலையிலும் கடைப்பிடித்ததில்லை, இனியும் அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடப் போவதுமில்லை. ஆனாலும், கருத்துநிலையில், தமிழின நலம் நோக்கி, அவர் போக்குகளை உண்மையும் – உறுதியாகவும் நடத்திட வேண்டும் என்னும் கவலையுடன் வெளிப்படையாகச் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற காலக் கட்டாயம் வந்துவிட்டது. இந்தவகையில் சில சொற்களை நாம் எச்சரிக்கையுடனும், தோழமையுணர்வுடனுமே கையாள விரும்புகிறோம். இவ்வாறு வெளிப்படையாக எழுதுவதற்காக, நடுநிலையும் அழுத்தமுமான உணர்வுடன், தமிழ் நலமும், தமிழின நாட்டு நலமும் கருதும் மெய்யன்பர்கள் நம்மைப் பொறுத்துக் கொள்வார்களாக,

நம் இந்தி எதிர்ப்பு முயற்சிகள் இன்று – நேற்று ஏற்பட்டதன்று. சரியாகச் சொன்னால், கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் இந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறோம். 1926ஆம் ஆண்டிலேயே, இந்தி எதிர்ப்புக் குரல் தொடங்கிவிட்டது. தந்தை பெரியார் அவர்கள், தாம் தம் 7.3.1926ஆம் நாள் 'குடி அரசு' இதழிலேயே முதன் முதலாக 'தமிழிற்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்' என்று இந்தியை எதிர்த்தும், கண்டித்தும், 'தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் பல கேடுகளில் (ஆபத்துகளில்) இந்தியும் ஒன்று” என்று எச்சரிக்கை செய்தும், விரிவாகவும் - விளக்கமாகவும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அப்பொழுதெல்லாம், இந்தி திணிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.