பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

245

இருப்பினும், பின்னால் இந்தத் தமிழினத்துக்கு வரவிருந்த மிகப் பெருங்கேட்டை முன்னமேயே உணர்ந்து, முன்னறிவித்த பெருமை அவருடையது. அப்பொழுதெல்லாம் நாமும், இன்று இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பலரும் (அறுபது அகவையைத் தாண்டியவர்களைத் தவிர) பிறந்தே இருக்கமாட்டோம். எனவே, நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே 'இந்தி' எனும் நச்சுச்செடிக்கு, இங்கிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது. அந்த முதல் குரலும், தந்தை பெரியாருடையது என்று எண்ணும்பொழுது நாம் வியப்பும், அதே சமயத்தில் சொல்லவொண்ணாத் துயரமும் கொள்கிறோம்.

இனி, தந்தை பெரியார் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து இந்தியை எதிர்த்துப் பல மாநாடுகளை நடத்தியும், பல நூற்றுக் கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றியும் நில்லாமல், பல போராட்டங்களையும் தம் இறுதிக்காலம் வரை செய்து கொண்டிருந்தார். அந்தப் போராட்டங்களில் பங்குகொண்ட பெருமக்கள், பெரும்புலவர்கள், பெருந்தலைவர்கள், பேரறிஞர்கள் அனைவரும் ‘தமிழக இந்தி எதிர்ப்பு’ வரலாற்றில் நெடுகவும் வருகிறார்கள்; இன்னும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

எனினும், இந்தி எனும், அன்று தோன்றிய நச்சுச் செடி, இன்று படிப்படியாய் பார்ப்பனர்களாலும், வடவர்களாலும், வல்லாட்சியாளர்களாலும் பெரிய நச்சு மரமாக வளர்க்கப்பட்டுப் பரவி, நம் அனைத்து மொழி, இன, நாட்டு, கலை, பண்பாட்டு முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் துளிர்க்கவும், வளரவும் விடாமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் கால்கொண்டு காழ்த்து வருகிறது.

அந்த இந்தி எனும் சண்டி மாட்டை - மதங்கொண்டு வெறிபிடித்துத் தமிழினத்தையே கட்டுக்குலைக்க வந்த வடநாட்டு யானையை இன்னும் நாம் அடக்கமுடியாமல், தந்தைபெரியார் அவர்களால் எண்ணியும், எழுதியும், எதிர்ப்புக் காட்டியும், தீர்மானங்கள் போட்டும், போராட்டம் நடத்தியும், சிறை சென்றும், இம்மியும் அடக்கவோ, ஒடுக்கவோ இயலாமற்போன, அதே வழிகளை நாமும் கடைப்பிடித்து இந்தித்திணிப்பை ஒடுக்கவோ, ஒழித்தோ விட முடியுமா என்பதே நமது கேள்வி.

'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' என்பார் திருவள்ளுவர். தந்தை பெரியார் அவர்கள் கையாண்ட அதே முறைகளை, அந்த அளவில் கூட கையாளாமல், அவர் ஈட்டியை எடுத்துக் குத்தியிருந்தால் நாம்