பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

247

இவ்வகையான முயற்சிகளின் வழி உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் அவரேந்திக் கீழே போட்டுவிட்ட, எரிந்துபோய்க் கரியாகிவிட்ட போராட்ட நெய்ப் பந்தங்களை நாம் எடுத்து வீசி என்ன பயன்? யார் அஞ்சிக் குலை நடுங்கப் போகிறார்கள்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா?

1978 ஆகத்து 15-இல் பெரியார் திடலில், மானமிகு வீரமணி கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலேயே நம்மை ஏதோ, மதிப்பும் அன்பும் காட்டி அழைத்துக் கலந்துகொண்டு கருத்துரையாற்றக் கேட்டுக் கொண்டதால், நாம் அன்றே, அங்கேயே, கலைஞர், செட்டி நாட்டரசர், கி.ஆ.பெ. குன்றக்குடி அடிகளார், கி. இராமலிங்கனார் போன்ற தலைவர்களையெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு சொன்னோம். 'இந்தியை எதிர்ப்பதெல்லாம் வீணான முயற்சிகள்: இந்தியை எதிர்க்கமுடியாது; பெரியாரை விட நாம் ஒன்றும் அதிகமான முயற்சியை அதில் செய்துவிட முடியாது; எனவே, இந்தியை எதிர்த்து மாநாடுகள் கூட்டுவதையும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதையும், போராட்டங்கள் நடத்துவதையும் கூட நாம் விட்டுவிட வேண்டும். இவ் வகையாலெல்லாம் நம் ஆற்றலை இழந்துகொண்டே போகக்கூடாது; நாம் இந்தியை எதிர்ப்பதை விட்டுவிட்டு இந்திய அரசையே எதிர்க்கவேண்டும். தமிழ்நாட்டைத் தனிநாடாகப் பிரிக்கப் போராடவேண்டும். தமிழ்நாடு தனியாகப் பிரியும்வரை இந்தியும் ஒழியாது; வடநாட்டுச் சுரண்டலும் வல்லாண்மையும் ஒழியாது; பார்ப்பணியமும் ஒழியாது; இந்து மதமும் ஒழியாது; அதனால் தமிழும் வாழாது; தமிழனும் தலையெடுக்கமாட்டான்” என்று.

இதுபோலும் கருத்துகளை நாம் கூறுவதாலேயே 'திராவிடர் கழகம்' நம்மை ஒதுக்கிவைத்திருக்கிறது என்பதையும், நம் மிகச்சிறிய இயக்க முயற்சிகளுக்கும், ஆங்காங்கே, தரப்பெறுகின்ற ஆதரவைத் தடைப்படுத்தி, வளரவிடாமல் செய்கின்றார்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம். நாம் எவருக்கும் எதிராகவோ, அல்லது நம் வாழ்க்கை உயிர் பிழைப்புக்காகவோ, எந்த முயற்சியையும் தொடங்கவில்லை; செய்துகொண்டும் வரவில்லை. இமைய மலை போலும் நலன்களைக்கூட, நாம் எடுத்துக்கொண்டு சுமந்து நிற்கும் கொள்கைக் குன்றுக்காக, எற்றி உதைத்துவிட்டு, எட்டி வந்து, இடறாமல் நடைபோட்டு வருகிறோம். இந்த நிலைகளை நாம் எந்த விளம்பர நோக்கத்துடனும் கூறவில்லை. இந்திரா காந்தி, இராசீவ் காந்தி அல்லர், எந்தக் காந்தியையுமே, நம் மொழி, இன, நாட்டு