பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

23


தமிழகம் பிரிதலே தக்கது


ந்தியா எக்காலத்தும் அரசியலில் ஒன்றிய தனி நாடாக இருந்ததில்லை. மிகப் பழங்காலத்தில் இந்நாடு ஐம்பத்தாறு தேசங்களாகவும். அதன்பின் 1947 வரை 632 சிறு நாடுகளாகவுமே தனித்தனி ஆட்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. ஏறத்தாழ முப்பத்து மூன்று கோடி மக்கள் உடைய முன்னைய இந்தியாவே 632 நாடுகளாகப் பிரிந்து தனித்தனி ஆட்சி ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததென்றால் (1961 மக்கள் கணக்குப்படி) 43.9 கோடி மக்கள் உள்ள இன்றைய இந்தியா தன் ஆட்சி முறையில் ஒன்றியிருக்க வேண்டும் என்பதும், அதனால் பல நன்மைகள் விளையுமென்பதும் அறியாமையாகும். அவ்வாறு இருப்பது பெரும்பான்மையான ஓர் இனத்தின் அல்லது ஒரு மொழியின் தனிப்பட்ட வல்லாண்மைக்கே அடிகோலுமேயன்றி எந்த அரசியல் சட்ட அமைப்பாலும் அதிகாரத்தாலும் நாட்டுக்கு நன்மையாக விளைந்துவிடப் போவது இல்லை. இது இப்படியே இருக்குமானால் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ள இனமோ, ஒரு மொழியோ தான் இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கமுடியும். குறிப்பாகச் சொன்னால் இக்கால் விளையும் எல்லாவகை அரசியல் குமுகாயப் பொருளியல் தோல்விகளுக்குக் கெல்லாம் இவ் வடிப்படையான - பிழையான அரசியல் அமைப்புத்தான் காரணம் ஆகும். இந்தியா தன்னாட்சி பெற்ற இப்பதினெட்டாண்டுக் காலத்தில் பேராயக்கட்சியன்றி வேறு எந்தக்கட்சி இந்திய ஆளுமையைக் கைப்பற்றி இருந்தாலும், அதுவும் இந்தியாவை இந்த நிலைக்குத்தான் - இன்னும் சொன்னால்