பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

251

இந்நேரத்தில், இங்குள்ள திராவிடர் கழகத் தோழர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

நாம் ஆங்கிலத்தை முன்னிருத்தி இந்தியை எதிர்க்கத் தேவையில்லை. தமிழ்மொழியை முன்னிருத்தியே – தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வளத்தையும் முன்வைத்தே – இந்தியை நாம் எதிர்க்கவேண்டும். நாம் நம் தாய்மொழிக்காக இந்தியை எதிர்த்துப் போராடுகையில், இந்திக்காரர்கள் ஆங்கிலத்துக்காக இறங்கிவரட்டுமே! இப்பொழுது நாம் தமிழுக்காக இந்தியை எதிர்க்கிறோமா, அல்லது ஆங்கிலத்துக்காக அதை எதிர்க்கிறோமா? ஏன், இதில் குழப்பம் உண்டாக்க வேண்டும்?

தமிழ்மொழியை எண்ணுகையில் நமக்கு ஆங்கிலமும் சரி, வேறு எந்த மொழியும் சரி, அனைத்தும் இந்தியைப் போலவே அயல் மொழிகளே! ஆங்கிலம் என்றால் சருக்கரை மொழி; தமிழ் என்றால் வெல்லமா? இந்த மனப்பான்மையுடன் நாம் இந்தி எதிர்ப்புச் செய்யும்வரையில், நம் கோரிக்கையும் வெற்றி பெற முடியாது; நாமும் தன்னுரிமை பெறமுடியாது.

ஆங்கிலம் என்கிற மொழியின் பயன்படுத்தத்திற்காக நாம் அதைப் படித்துக்கொள்வதென்பது வேறு அதற்காக நாம் இந்தியை எதிர்ப்பது என்பது வேறு. தமிழுக்காகவே நாம் இந்தியை எதிர்க்கின்றோம் என்பதைப் பட்டையை உரித்தாற்போல் பளிச்சென்று வடநாட்டானுக்கு அடித்துச் சொல்ல நாம் ஏன் தயங்க வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை, ஆங்கிலமும் இந்தியும் ஒன்றுதான். ஆங்கிலம் அறிவு மொழியானால் என்ன? அதற்கு மட்டும் நாம் அடிமை ஆகலாமா? 'இந்திமொழி வேண்டாம், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கு' என்று நாம் சொல்லும்போது, 'ஆங்கிலம் என்னும் வேற்று நாட்டு மொழிக்காக' நாம் வழக்குரிமை (வக்காலத்து) வாங்குவதாக அவர்கள் கூறுவார்களே தவிர, நம் தாய்மொழி தமிழுக்காகப் போராடுவதாக அவர்கள் கூறமாட்டார்களே!

அண்மையில் சென்னை, உயர்நெறி மன்றத்தில், இந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சலுகையைக் காட்டி மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று தொடுக்கப்பெற்ற வழக்கொன்றில், 'இந்தியை எதிர்த்ததை, தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் போராடியதாகக் கருதுவதற்கு இடமில்லை' என்று தீர்ப்பு வழங்கியதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (தினமணி 28.11.1985) (வழக்கு மன்றத் தீர்ப்பின் பிற பகுதிகள் நம்