பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேண்டும் விடுதலை

இதைவிட மிகக் கீழான நிலைக்குத்தான் கொண்டுவந்திருக்க முடியும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம். வெள்ளையனே தன் வல்லதிகாரத்தால் செம்மைப்படுத்தவியலாத இவ்விந்திய ஒருமைப் பாட்டை இங்குள்ள ஒரிரு அரசியல் காயாட்டக்காரர்களின் தம் பதற்றப் போக்காலும் ஆட்சி வெறியாலும் ஏற்படுத்திவிடக்கூடும் என்று காண்கின்ற கனவு என்றும் நிறைவேற முடியாது. அந்நிலை பூனை வளர்க்கத் தெரியாதவன் யானையை வளர்க்க விரும்பியது போலாகும். மொழியாலும் இனத்தாலும், சமயத்தாலும் குலத்தாலும், பண்பாட்டாலும் பலவகையாகப் பகுக்கப்பட்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இப்பிரிவுநிலை தவிர்க்க முடியாதது. இயற்கையுமே ஆகும். பிரிவற்ற ஒரு நிலை இந்நாட்டு முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் என்றும் வழி விட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போயினும் இந்தியாவின் ஒரு மூலையில் மொழியெழுச்சியும், இனவெழுச்சியும், பண்பாட்டு எழுச்சியும், சமயவெழுச்சியும் தோன்றித் தோன்றி அவ்வக்கால் ஏற்பட்டு வருகின்ற சிறியளவு பயன்களையும் அரித்து வருமேயன்றி, ஓர் அமைதி நிறைந்த சூழலையோ அரசியல் முன்னேற்றத்தையோ ஏற்படுத்திவிட முடியா. பிரிவு மனப்பான்மையால் வருகின்ற முடிவன்று இது. உலகவியற்கையினையும், மக்களின் உரிமை வேட்கையினையும், அரசியல் அறிவுவிரிவையும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கின்ற உண்மை இது.

ஏறத்தாழ 43.9 கோடி மக்களுள்ள இந்தியாவில் ஏறத்தாழ 165 மொழிகள் வழங்கி வருகின்றன. இவற்றுள் அரசியல் மொழி சட்டத்தில் உள்ள அசாமி, ஒரியா, உருது, இந்தி, கன்னட, காசுமீர், குசராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராட்டி, மலையாளம், வங்காளம், சமற்கிருதம் முதலிய 14 மொழிகளையும் ஏறத்தாழ 38 கோடி மக்கள் பேசுகின்றனர். இவற்றுள் சமற்கிருதத்தை மட்டும் 1951 ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 555 பேர்களும் 1961 -ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 2666 பேர்களும் பேசிவருவதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் இம்மொழியும் மற்ற 13 மொழிகளுடனும் சேர்த்து எண்ணப்படுவது, இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பெற்ற ஊடுருவல் சூழ்ச்சியால் நேர்ந்த விளைவு ஆகும். இவ்வூடுருவல் இன்றைய நிலையில் எந்த அளவு வளர்ந்திருக்கின்றது என்றால் “சமற்கிருதம்” வழக்கிழந்த ஒரு மொழியன்று” என்று திரு.சி.பி. இராமசாமி அவர்கள் பேசுமளவிற்கும், “சமற்கிருதம் அழிந்துவிடுமானால் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் அழிந்து விடும்” என்று