பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

வேண்டும் விடுதலை

தாங்கள் மக்கள் விரும்பும் அல்லது அவர்களுக்கு நலந்தரும் போக்குக்கு ஆளாகி விடக் கூடாதே என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கிறது என்பதைக் கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் உறுதி செய்துள்ளன. இத்தகைய எதிர்விளைவு நிகழ்ச்சிகள் இங்கு அங்கு என்னாதபடி இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இன மக்களிடம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே நடந்து வருவது எல்லாருக்கும் தெரியும். இது ஏதோ திடுமெனக் கிளம்பி விட்டதாக யாரும் கூறிவிட முடியாது.

ஆட்சி அதிகாரக்காரர்களின் வன்முறைப் போக்கும் மிகத் திமிரான நடவடிக்கைகளும், மக்களிடையே கொந்தளிப்பையும் மனக்கொதிப்பையும் ஏற்படுத்துவது உலகெங்கணும் நடந்துவரும் செய்தியே! அவற்றுக்கான எதிர்விளைவு அடையாளங்களே அண்மையில் நடந்த குண்டு வெடிப்புகளும், பிற வன்முறை நிகழ்ச்சிகளும், இவற்றைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருத்தல் கூடும். ஏனெனில், நடுவண் அரசை எதிர்க்கின்ற அரசியல் முது தலைவர்களெல்லாம் தமிழகத்தைப் பொறுத்த வரையில், நன்கு காயடிக்கப் பெற்ற - ஆண்மையற்ற - கோழைகளாகவே இருப்பதை நாம் பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளில் உள்ள இரண்டு மூன்று துணிவுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, பிற அனைத்துப் பேரும், நடுவணரசு எது செய்தாலும் என்ன பேசினாலும் அவற்றுக்கு எதிராக வலிக்காமல் பேசும் - நோகாமல் அடிக்கும் தந்திரக்காரர்களாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில், நடுவணரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகளையெல்லாம் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவர்களாக, இங்குள்ள இளைஞர்கள் மாறிவருவதில் வியப்பில்லை. கருத்தளவில் போராடிப் போராடிக் கோரிக்கையளவில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி நடத்தித் தீர்மானங்கள் போட்டுப் போட்டு, இனி அவற்றினும் விஞ்சிய வகையில் பேரணிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தி நடத்திச் சோர்வுற்ற – சலித்துப் போன, குருதி கொப்புளிக்கும், இளம் உள்ளங்களே, இப்பொழுது கருவிகளைத் தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இவர்களின் போக்குகளைத் தவறு என்று கூறுவதற்கு முற்பட்டவர்கள், அரசின் போக்குகளையும் கண்டிக்கத் தெரிந்தவர்களாக அல்லது கண்டிக்கத் துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இளைஞர்களின் எழுச்சிகளை