பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேண்டும் விடுதலை

இன்றியமையாமை என்று கருதும் ஒன்று வடவரின் வாழ்விற்கு தேவையற்ற ஒன்றாகப் பட்டுத் தூக்கியெறியப் படுகின்றது. நல்முறைப் பழக்க வழக்கங்களிலும், மொழியீடுபாடிலும், தமிழன் அல்லது தென்னாட்டவர்கள், வடவர்களால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வடநாட்டில் வழங்கும் இந்தி மொழி மட்டும் தென்னாட்டு மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை, அங்கு விளையும் கோதுமை கூட, தென்னாட்டு அரிசியினை அகற்றப்பாடுபடுகின்றது! அரசியல் ஒருமைப் பாட்டிற்காகச் செய்யப்பெற்ற முயற்சிகள் அத்தனையும் தென்னாட்டு மக்களுக்குத் தீங்காவும் இவர்களைத் தாழ்த்துவதாகவுமே அமைந்திருக்கின்றன. இக்கொடுமையை நெடுநாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தொடக்கத்தில் அரசியல் அமைதிக்காக ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உலக ஒற்றுமைக்காக ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும் சிற்சில சீர்திருத்தங்கள் கூட, முடிவில் ஓரின அழிவிற்கும் வளர்ந்து முழுமைப்பட்ட ஒருவகைப் பண்பாடின் வீழ்ச்சிக்கும் சிறந்து நிறைவுகொண்ட ஒரு மொழியின் தாழ்ச்சிக்கும் அடிகோலுவனவாகவே அமைகின்றன. இவையன்றி ஆளுமைத் தொல்லைகளும் பலவாகிப் பெருகி அடிப்படைக் கொள்கையையே ஆட்டி அசைக்கின்றன. தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற ஒரு செயலிற்கு வடநாட்டார் இசைவைப் பெறவேண்டியுள்ளது. இங்குச் செய்யத் திட்டமிடும் ஒரு வாணிகத்திற்குத் தில்லியின் கடைக்கண் பார்வை வேண்டியிருக்கின்றது. மதுரையிலிருந்து சென்னைக்கு விடுக்கப் பெறும் அஞ்சலில் ஒட்டவேண்டிய ஓர் உருவத்தை வடநாட்டினர் தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. தென்னாட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசியல் அல்லது குமுகாயவியல் தலைவர்களின் வாய்களை வடநாட்டினர் தம் கைகள் திறந்து மூட வேண்டியுள;; குமரி முனையில் நடத்தவிருக்கும் ஒரு தாளிகையின் பெயரைக் கூட தில்லியில் தமிழ் தெரியாத தமிழ்ப்பற்றில்லாத தமிழ்ப் பண்பாட்டிற்கு மதிப்பளிக்காத ஒரு வடநாட்டான் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இங்கிருக்கும் சூழல், பண்பாடு, மொழி முதலியவற்றை அங்குள்ள ஒருவன் கணித்து நல்லதைச் செய்துவிட முடியும் என்று எவ்வடிப்படையில் கருதப்படுகின்றதோ நாம் அறியோம். வடநாட்டுத் தாளிகைகள் பெயர்களை இங்குள்ளவர்கள் தேர்ந்தெடுப்பதை அங்குள்ளவர்கள் ஒப்புக் கொள்ளுவர்களா? இவ்வாறு சிறிய சிறிய செயல்களிலெல்லாம் தமிழர் - அல்லது