பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

279

வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறில்லை; இப்பொழுதைய நிலையில் நாம் தாய்மொழியில் கல்விகற்கவும் முடியாது; ஒரு வேளை கல்வி கற்றாலும் நாம் அரசுப்பணியில் அமரவும் முடியாது. இனி, இதற்கு மாறாக, நாம் தில்லிக்காரர்கள் பேசும் மொழியாகிய இந்தி மொழியில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுகிறோம். இந்தி மொழியில் படித்துப் பட்டம் பெற்றால் உடனே அரசுப்பணி கிடைக்கும். சம்பளமும் கூடுதலாகவே கிடைக்கும். இந்நிலை எதைக் காட்டுகிறது? நாம் தில்லியரசுக்கு அடிமை என்பதையே உறுதிப்படுத்தவில்லையா இந்த இழிவான நிலைமாறியாக வேண்டுமா? இந்நிலை மாறியாக வேண்டாமா? இதற்கு இளைஞர்கள் எதிர்காலத் தமிழ்க்குடி மக்களாகிய மாணவர்கள் ஆகியோர்தாம் ஒரு முயற்சி செய்தாக வேண்டும்; ஒரு முடிவு கண்டாக வேண்டும்; போராடியாக வேண்டும். உரிமைக்காகப் போராடாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

நமக்கு மொழியுரிமை இல்லை; இன முன்னேற்றத்திற் கென்று எதுவும் செய்ய முடியாது. தமிழ் நாட்டுக் கோயில்களில் நம் தாய் மொழியாகிய தமிழில் கூட வழிபாடு செய்ய நமக்கு உரிமையில்லாத பொழுது, வாழ்வியல் உரிமைகளுக்கு எப்படி வழி கிடைக்கும்?

இவற்றை யெல்லாம் மாணவர்கள் நன்கு எண்ணிப் பார்த்து தமிழ் மேல் விருப்பமும், தமிழினத்தின் மேல் பாசமும், தமிழ் நாட்டின் மேல் பற்றும் கொண்டு இயங்குதல் வேண்டும். அல்லாக்கால் தமிழ் நாட்டின் தமிழினத்தின், தமிழ் மொழியின் எதிர் காலம் இருண்டுவிடும். இவ்விருளைப் போக்க ஒளியேற்ற வேண்டாமா? அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்குதான் என்ன? சிந்தியுங்கள் இளைஞர்களே! சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!.

- தமிழ்ச்சிட்டு, குரல் 19, இசை, 4, 1988