பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

வேண்டும் விடுதலை


 
எரிவதைத் தடுக்காமல் கொதிப்பை
அடக்க முடியாது!


ந்தியாவின் அரசியல் நிலைமை மிகக் கொடுமையானதாக மட்டுமன்று, மிக மிகக் கீழ்மையுடையதாகவும் ஆகிவிட்டது. மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாகிலும் இரண்டு மூன்று இடங்களில் கொடிய அடக்குமுறைக்கும், கொலைகள் கொள்ளைகளுக்கும், துமுக்கி (துப்பாக்கி)ச் சூட்டிற்கும் ஆளாகுகிறார்கள். இந்திராக் கட்சியின் அடக்குமுறைகளும் ஆணவ அதிகார வெறித்தனங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. பணவலிமையும் அதிகாரமும் கைகோத்துக் கொண்டு நாட்டை அலைக்கழிக்கின்றன. ஏழை மக்கள் கேள்வி கேட்பாரற்றுக் காவல் துறையினராலும், படைத்துறையினராலும் சுட்டுப் பொசுக்கப்படுகின்றனர். எந்த வகைக் காரணமும் இன்றி ஆளுங்கட்சிக்காரர்களாக இல்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர்கள் இவ்வாறு துன்புறுத்தப் படுகிறார்கள் என்று தெரிய வருகிறது.

அரசுக்கு எதிராக அன்று, ஆளுங்கட்சிக்கு எதிராகவும், அல்லது தனிப்பட்டட முறையில் அக்கட்சியில் உள்ள யாருக்கு எதிராகவும் நடந்தாலும் கூட, அவ்வாறு நடப்பவர்கள் ‘மக்கள் பகை ஆற்றல்கள்’ (மக்கள் விரோதச் சக்திகள்) அல்லது குமுகாய எதிர்ப்பு ஆற்றல்கள் (சமூக விரோத சக்திகள்), தேசிய இனப் பகைவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள் (விஷமிகள்) என்றவாறு பட்டம் சூட்டப்பெற்று,